புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்னும் முறையை மத்திய அரசு கொண்டுவர இருப்பதாக கடந்த ஆண்டு முதல் அடிக்கடி பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. பெரும்பாலான மாநில கட்சிகள் மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்தியாவில் அரசியலமைப்பு சட்டப்படி நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த 1967ஆம் ஆண்டு வரை நாடாளுமன்றத்துக்கும் மாநில சட்டசபைகளுக்கும் ஒரே காலகட்டத்தில்தான் தேர்தல்கள் நடத்தப்பட்டு வந்தன.
ஆனால் சில மாநிலங்களில் ஆட்சிக் கலைப்பு, பெரும்பான்மை இல்லாததால் ஆட்சிக் கவிழ்ப்பு போன்றவை காரணமாக சட்டசபைகளுக்குத் தேர்தல் நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதனால் நாடாளுமன்றத்துக்கு ஒரு தடவையும், மாநில சட்டசபைகளுக்கும் அந்தந்த மாநிலங்களின் சட்டசபை காலம் முடிவடைவதைப் பொருத்தும் தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த தேர்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. தனித்தனியாகத் தேர்தல் நடத்தும் போது அதிக செலவு ஏற்படுவதாகவும் நிர்வாக ரீதியாக பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து நாடு முழுவதும் ஒரே தேர்தல் முறையை அமல்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு தேர்தல் ஆணையமும் அரசியல் கட்சிகளும் சுமார் 60,000 கோடி ரூபாயை செலவு செய்து இருக்கின்றன. இதேபோல மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடக்கும்போதும் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகி உள்ளது.
இரு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவது பற்றி மத்திய அரசு கடந்த சில மாதங்களாக ஆலோசித்து வந்தது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர்1) மத்திய அரசு இந்த விவகாரத்தில் அதிரடியாக ஒரு நடவடிக்கையை மேற்கொண்டது.
அதன்படி 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் சேர்த்து தேர்தல் நடத்துவது பற்றி ஆய்வு செய்ய குழு அமைத்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இந்தக் குழுவுக்கு முன்னாள் அதிபர் ராம்நாத் கோவிந்த் தலைவராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அவர் தலைமையிலான குழுவினர் நாடாளுமன்றத்துக்கும் மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி விரிவான ஆய்வு மேற்கொள்வார்கள்.
அதன் அடிப்படையில் மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக ஒருங்கிணைந்து “இந்தியா” கூட்டணியை உருவாக்கி இருக்கும் எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசின் இந்த நடவடிக்கை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

