புதுடெல்லி: இந்திய தலைநகரான புதுடெல்லிதான் உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக புதிய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
அளவுக்கு அதிகமான காற்றுத் தூய்மைக்கேடு காரணமாக புதுடெல்லிவாசிகளின் ஆயுட்காலம் சுமார் 12 ஆண்டுகள் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் அந்த ஆய்வு அபாய சங்கு ஊதியுள்ளது.
இந்த அறிவிப்பு காரணமாக டெல்லிவாசிகளிடையே அதிர்ச்சி\யும், கவலையும் தலைதூக்கி இருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிகாகோ பல்கலைக்கழகத்தின் எரிசக்திக் கொள்கைப் பயிலகம் என்ற அமைப்பு அண்மையில் நடத்திய ஆய்வு இவ்வாறு தெரிவிக்கிறது. அந்த அமைப்பு, காற்றுத் தர அறிக்கைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
டெல்லியில் இப்போது காணப்படும் காற்றுத் தூய்மைக்கேடு, உலக சுகாதார நிறுவனம் (WHO) நிர்ணயித்த வரம்பை விட மிக அதிகமாக இருப்பதால், இந்த நகரத்தில் வசிக்கும் மக்கள் தங்கள் வாழ்நாளில் சுமார் 11.9 ஆண்டுகள் ஆயுளை இழக்க நேரிடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளது டெல்லிவாசிகளிடையே அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மக்களில் சுமார் 67.4% பேர் வசிக்கும் பகுதிகளில் காற்றுத் தூய்மைக்கேட்டு அளவு தேசிய காற்றுத் தர அளவைவிட அதிகமாக இருப்பதாகவும் ஆய்வு கூறுகிறது.
இதனால் இந்தியரின் சராசரி ஆயுட்காலம் 5.3 ஆண்டுகள் வரை குறையும் ஆபத்து உள்ளது. தேசிய வழிகாட்டுதலின்படி பார்த்தால் கூட இப்போதைய மாசு நிலை நீடித்தால் சுமார் 18 மில்லியன் டெல்லிவாசிகள், தங்கள் வாழ்நாளில் சுமார் 8.5 ஆண்டுகளை இழக்க நேரிடும் என்றும் ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

