தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ராஜஸ்தானில் பெண்ணை நிர்வாணப்படுத்தி தெருவில் இழுத்துச் சென்ற கணவர், உறவினர்கள்

2 mins read
97fe9f51-fe11-45bc-8ef5-4492b878458b
வன்கொடுமையில் ஈடுபட்ட கணவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். - வரைகலைப் படம்: இந்திய ஊடகம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் 21 வயது நிரம்பிய பழங்குடியினப் பெண்ணை அவரது கணவர், உறவினர்கள் சேர்ந்து நிர்வாணப்படுத்தி, தெருவில் இழுத்துச் சென்ற சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்துக்கு முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே உள்ளிட்ட தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், வன்கொடுமையில் ஈடுபட்ட கணவர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. காவல்துறை டிஜிபி உமேஷ் மிஸ்ரா கூறுகையில், “சம்பந்தப்பட்ட பெண் கணவரை விட்டுவிட்டு வேறு ஒருவருடன் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கணவர் வீட்டார் அந்தப் பெண்ணைக் கடத்தி தங்களின் தாரிவாட் கிராமத்துக்குக் கொண்டு வந்துள்ளனர். “பின்னர் அங்கு அவரை ஊரார் முன்னிலையில் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்றுள்ளனர். அந்தப் பெண்ணை அடித்துத் துன்புறுத்தியுள்ளனர்.” என்றார்.

சம்பவம் தொடர்பான காணொளி பரவலாக பகிரப்பட்ட நிலையில் அதன்மீது காவல்துறையினர் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பெண்ணின் கணவர் உள்பட 3 பேரை கைது செய்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அமித் குமார் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன.

காவல்துறையினரைக் கண்டு தப்பியோடியபோது குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். காயங்களுக்காக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக முதல்வர் அசோக் கெலாட் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “பண்பட்ட சமூகத்தில் இதுபோன்ற குற்றவியல் குற்றங்களுக்கு இடமில்லை. சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளேன்,” என்று பதிவிட்டிருந்தார்.

முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, இச்சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார். மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் மாநில அரசு மெத்தனமாக இருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்