சீர்காழி அருகே இருக்கும் திருநாங்கூர் என்ற ஊரில் 70 ஆண்டுகளுக்கு முன் பிறந்த வசந்தா என்ற மாது அதே ஊரில் அந்தக் காலத்தில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார்.
குடும்பம் ஏழ்மை. உடன் பிறந்தவர்கள் அதிகம். பாலசுப்ரமணியன் என்பவருக்கு வாழ்க்கைப்பட்டு குத்தாலம் என்ற ஊருக்கு வாழச் சென்ற திருவாட்டி வசந்தாவுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன.
இயற்கையிலேயே குழந்தைகள் மீது பாசம் கொண்ட திருவாட்டி வசந்தா, ஏழ்மையிலும் தன் பிள்ளைகளைச் சீரும் சிறப்புமாக சீராட்டி பாராட்டி வளர்த்து வந்தார். பிள்ளைகளுக்குத் திருமணம் ஆனதும் அவர்கள் இருவரும் தங்கள் குடும்பமே கதி என்று போய்விட்டார்கள்.
கணவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போக அவரைக் கூட்டிக்கொண்டு தன் சொந்த ஊரான திருநாங்கூருக்கே திருவாட்டி வசந்தா திரும்பினார்.
அங்கு ஒரு சிறு இடத்தை அவருடைய உறவினர்கள் கொடுக்க அதில் ஒரு குடிசை வீட்டைக் கட்டிக்கொண்டு வாழ்ந்து வரும் திருவாட்டி வசந்தா, இரண்டு ஆண்டுகளுக்கு முன் தன் கணவரையும் இழந்தார். திருவாட்டி வசந்தா தனது 40 வயது முதலே தொண்டூழியம் அடிப்படையில் கைக்குழந்தைகளைக் குளிப்பாட்டி சேவை புரிந்து வருகிறார்.
“வெளியூருக்கு வாழ்க்கைப்பட்டு போன பெண்கள் தலைப் பிரசவத்திற்காக சொந்த ஊருக்குத் தாயார் வீட்டுக்கு வருவார்கள். உள்ளூரிலேயே பிள்ளைகளைப் பிரசவிப்போரும் உண்டு.
“இவர்கள் மத்தியில் கைராசிக்காரி என்ற பெயர் எனக்கு உண்டு.
“என்னைத் தெரிந்தவர்கள் குழந்தையைக் குளிப்பாட்ட கூப்பிடுவார்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் அவர்கள் வீட்டிற்குப் போய் பிள்ளையைக் குளிப்பாட்டிவிட்டு வருவேன்.
தொடர்புடைய செய்திகள்
“இப்போது இரு குழந்தைகளுக்கு உள்ளூரிலேயே சேவையாற்றி வருகிறேன்.
“பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் இப்போதைய படித்த பெண்களில் பலருக்குப் பிள்ளைகளை முறையாகக் கையாளுவது எப்படி என்பது தெரியவில்லை. தலையில் கைவைத்து தாங்கி முறையாக பிள்ளையைத் தூக்கவில்லை எனில் சுளுக்கு, உரம் விழுந்துவிடும் என்று பயப்படுகிறார்கள். அவர்களுடைய தாயாரும் வழிமுறை தெரியாமல் தடுமாறுகிறார்கள்.
“பொதுவாக குழந்தைகளைத் தைரியமாக தூக்கி உடலை அழுத்திவிட்டு குளிப்பாட்ட அவர்கள் பயப்படுவார்கள். குழந்தையைக் குளிப்பாட்ட வெந்நீர் சூடாக இருக்க வேண்டும். குளிப்பாட்டும்போது தலையில் இருந்து கால் வரை அழுத்தி பிடித்துவிட்டு நீவிவிட்டு சுத்தமாகக் குளிப்பாட்ட வேண்டும்.
“குழந்தையைக் குளிப்பாட்டுவதற்குப் பயற்றம் மாவை பயன்படுத்துவதுண்டு.
“ஆனால் இப்போது குழந்தை சோப்பை, குழந்தை எண்ணெய்யைப் பயன்படுத்தலாம். குளிப்பாட்டியதும் சுத்தமான துணியால் துவட்ட வேண்டும். பிளாஸ்டிக் துணியைப் பயன்படுத்தவே கூடாது.
“பிறகு கரியைப் பற்றவைத்து நெருப்பு உண்டாக்கி அதில் சாம்பிராணியைப் போட்டு குழந்தையை லாவகமாக தூக்கிப்பிடித்து உடல் முழுவதும் காட்ட வேண்டும்.
“சாம்பிராணி புகை தலைமுடிக்குள் புகுந்து வெளியேறுமாறு முடியை உலர்த்த வேண்டும். இப்படி செய்வதால் நீர்க்கொள்ளாது.
“பிள்ளைகளுக்குப் பிறந்து மூன்று மாதம்வரை குளித்து முடித்ததும் குங்குமம்பூ, கோரோசனையை வெற்றிலைச் சாற்றில் கலந்து கொடுக்க வேண்டும். மூன்று மாதங்களுக்குப் பிறகு பிள்ளையைக் குளிப்பாட்டி சாம்பிராணி போட்டதும் மூலிகைகள் கலந்த மருந்தைக் கொடுக்க வேண்டும்.
“சித்தரத்தை, ஜாதிக்காய், மாசிக்காய், சுக்கு, பூண்டு, பெருங்காயம் ஆகியவற்றை உரைக்கல்லில் இழைத்து அதை வெந்நீரில் கரைத்து உப்பு போட்டு தயாரிக்கப்படும் இந்த மருந்துக்கு உரை மருந்து என்று பெயர்.
“ஜாதிக்காயைச் சூடான சாதத்தில் புதைத்து வைத்து கொஞ்ச நேரம் கழித்து எடுத்து உலர்த்தி பிறகு அதை இழைக்க வேண்டும்.
“இந்த மருந்தைப் பிள்ளைகளுக்கு ஒரு வாய் கொடுக்க வேண்டும்.
“ஒன்றுவிட்டு ஒரு நாள் அல்லது பிள்ளையைக் குளிப்பாட்டும் நாளன்று இதைக் கொடுத்து வந்தால் உடலில் எதிர்ப்பு சக்தியும் தெம்பும் வலுவடையும். உறுப்புகள் முறையாக வளரும்.
“பிள்ளையைக் குளிப்பாட்டும்போது அதன் வாயில்கை விரலைவிட்டு நாக்கில் இருந்து கோழையை வழித்து வெளியே எடுக்க வேண்டும். இப்படி செய்து வந்தால்தான் நாளடைவில் நாக்கு நன்கு மடங்கும்.
“தமிழுக்கே உரிய ‘ழ’ என்ற எழுத்தை முறையாக உச்சரிக்க பிள்ளையால் முடியும். நாக்கின் சுவை உணரும் தன்மை மேம்படும்”, என்று திருவாட்டி வசந்தா விளக்கமாகக் கூறினார்.
திருவாட்டி வசந்தாவை நான் சந்தித்தபோது அவர் அப்போதுதான் ஒரு பெண் குழந்தையை, அந்தக் குழந்தையின் வீட்டிற்குச் சென்று குளிப்பாட்டிவிட்டு தன் குடிசை வீட்டிற்குத் திரும்பி தேநீர் வைத்து குடிக்க ஆயத்தமாகிக் கொண்டு இருந்தார்.
“நான் 100 நாள் வேலைக்குப் போகிறேன். மாதம் ரூ.1,500 கிடைக்கும். முதியோர் உதவித்தொகையாக மாதாமாதம் ரூ.1,200 கொடுக்கிறார்கள். என் வீட்டில் ஒரே ஒரு மண்ணெண்ணெய் விளக்கும் விறகு அடுப்பும்தான் உள்ளன. இதுவே எனக்குப் போதும்.
“பிறந்த வீட்டிற்குக் கைப்பிள்ளையுடன் வரும் பெண்கள் தங்கள் புகுந்த வீட்டிற்குப் புறப்படும்போது என்னை அழைத்து புடவை உள்ளிட்ட பொருள்களை வெகுமதியாக கொடுப்பார்கள். பொதுவாக நான் பணமாக கேட்பேன். ரூ.1,000 கொடுப்பார்கள். இப்படி அன்பாகக் கொடுப்பதை நான் வாங்கிக் கொள்வேன்.
“அன்றாடம் பிள்ளையைக் குளிப்பாட்டும்போது தேநீர், காபி, சாப்பிட ஏதாவது கொடுப்பார்கள். விருப்பம் இருந்தால் வாங்கிக்கொள்வேன்.
“எனக்குக் குழந்தைகள் என்றால் உயிர். என் பிள்ளைகள் என்னைக் கைவிட்டுவிட்டார்கள். ஆனால், இதுநாள்வரை நான் குளிப்பாட்டி ஆளாக்கி இருக்கும் பிள்ளைகளில் எத்தனையோ பிள்ளைகள் என்னை இன்னமும் நினைவில் வைத்து இருக்கிறார்கள்.
“எப்போதாவது அவர்கள் என்னைச் சந்திக்கும்போது அன்பாக விசாரித்து உளப்பூர்வமாக அவர்கள் என்னை நேசித்து அன்பை பல வழிகளில் வெளிப்படுத்துகிறார்கள்.
“அவர்கள் ஒரு காலத்தில் என் கையால் வளர்ந்த பிள்ளைகள் என்பதை நினைத்து நினைத்து நான் பூரித்துப் போவேன். இதுதான் என் வாழ்க்கையில் எனக்கு உள்ள நிரந்தர நிம்மதி,” என்று திருவாட்டி வசந்தா கூறியதைக் கேட்ட நான், இந்த தாய் பெற்ற பிள்ளைகளா சொந்த தாயைத் தவிக்கவிட்டு போய்விட்டார்கள் என்ற கவலை, விரக்தியுடன் புறப்பட்டேன்.