பெங்களூரு: கர்நாடக மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சோதனைகளில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த சோதனையில் போதைப்பொருள் கடத்தலில் பெங்களூருவில் வசிக்கும் வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு தொடர்பு இருப்பதாக மங்களூரு காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து தனிப்படை காவல்துறையினர் பெங்களூரு சென்று அந்த பெண்ணை மடக்கி பிடித்தனர்.
அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அவர் நைஜீரியாவைச் சேர்ந்த ரெஜினா ஜாரா என்கிற ஆயிஷா (33) என்பது தெரியவந்துள்ளது.
மாணவர் விசாவில் அவர் இந்தியா வந்துள்ளார்.
சிறிது காலம் ஒரு மருத்துவமனையில் தாதியராகப் பணிபுரிந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதற்காகவே அவர் தனது வேலையை விட்டிருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
இது குறித்து விளக்கமளித்த மங்களூரு காவல்துறை ஆணையர் குல்தீப்குமார் ஆர்.ஜெயின், போதைப்பொருளுடன் கைதான நைஜீரிய இளம்பெண் மீது கர்நாடக மாநிலத்தில் பல காவல் நிலையங்களில் போதைப்பொருள் கடத்தல் வழக்கு உள்ளது. மாணவர் விசாவில் இந்தியாவுக்கு வந்து பின்னர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளார். இந்தப் பெண்ணுடன் தொடர்பில் இருந்தவர்களை பற்றி தீவிரமாக விசாரித்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.