உலக அளவில் இந்தியா தான் தேங்காய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.
இந்தோனீசியாவில் பயிரிடப்பட்ட தென்னை தற்போது உலகில் 16 நாடுகளில் பயிரிடப்படுகிறது. இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ் நாடுகளில் அதிக பரப்பளவில் தென்னை பயிரிடப்பட்டாலும் இந்தியாவில் தான் தேங்காய் உற்பத்தி அதிக அளவில் உள்ளது என்று தென்னை வளர்ச்சி வாரியத்தின் சென்னை மண்டல இயக்குநர் இ.அறவாளி கூறினார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை கல்லுாரி ஆராய்ச்சி நிலையத்தில் சனிக்கிழமை உலக தேங்காய் தினத்தை முன்னிட்டு நடந்த கருத்தரங்கத்தில் அவர் பேசினார்.
உலக அளவில் தேங்காய் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகித்தாலும் அதன் பயன்பாடு இந்தியாவில் குறைவாகத்தான் உள்ளது. அதே நேரத்தில் இந்திய தேங்காய் வளைகுடா, ஐரோப்பியா, ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.
இந்தியாவின் தென் மாநிலங்களில் அதிகளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டாலும் தமிழகத்தில் அதிகளவில் தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது.
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் 57 ஆயிரம் ஹெக்டேரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கஜா புயலுக்குப் பின் தென்னை சாகுபடி பாதிக்கப்பட்டு தற்போது மீண்டு வருகிறது. தென்னை சாகுபடியை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு தென்னை வளர்ச்சி வாரியம் பல்வேறு உதவிகளை மாநில அரசு வாயிலாக வழங்கி வருகிறது.
தேங்காய்க்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் தேங்காயை மதிப்பு கூட்டும் பொருளாக மாற்றி அதனை விற்க விவசாயிகளுக்கு பயிற்சிகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. தேங்காயை மதிப்பு கூட்டும் பொருளாக மாற்ற விவசாயிகள் உழவர் உற்பத்தி நிறுவனம் மூலம் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் தென்னை வளர்ச்சி வாரியம் அனைத்து உதவிகளையும் செய்யும் என்று அவர் தெரிவித்தார்.

