ஆட்டைப் பிடிக்க வந்த புலி கூண்டுக்குள் சிக்கியது

1 mins read
1c150bfe-ec3b-4f2c-9651-80996485192f
நீண்ட நாள்களாக அச்சுறுத்தி வந்த புலி சிக்கியதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். - படம்: இந்திய ஊடகம்

வயநாடு: கேரள மாநிலம் வயநாட்டில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலி ஒன்று கூண்டுக்குள் சிக்கியது.

வயநாடு சுல்தான் பத்தேரி பகுதியில் வனப்பகுதிக்கு அருகே விவசாய தோட்டங்கள் இருக்கும் இடத்தில் புலி நடமாட்டம் காணப்பட்டது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் அச்சம் அடைந்தனர்.

புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென அவர்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் புலி நடமாட்டம் காணப்பட்ட பகுதிகளில் வனத்துறையினர் கூண்டுகளை வைத்தனர்.

கூண்டுக்குள் ஆடு ஒன்று கட்டி வைக்கப்பட்டு இருந்தது. திங்கட்கிழமை காலை ஆட்டைப் பிடிக்க வந்த புலி கூண்டுக்குள் வசமாகச் சிக்கியது.

இது குறித்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை ஊழியர்கள், உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் விரைந்து கூண்டில் சிக்கிய புலியைப் பார்த்தனர்.

கால்நடை மருத்துவ நிபுணர்கள் பரிசோதித்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் கூறினர்.

பல நாள்களாகத் தொல்லை தந்து வந்த புலி சிக்கியதைத் தொடர்ந்து சுல்தான் பத்தேரி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

குறிப்புச் சொற்கள்