இம்பால்: வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாத முகாம்களை அழிப்பதில் வல்லவர் என்று போற்றப்படும் நெக்சல் சன்ஜென்பாம் என்னும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியிடம் மணிப்பூர் கலவரத்தை ஒடுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைத்தேயி சமுதாயத்தினர் பழங்குடி அந்தஸ்து கோரி வருகின்றனர். இதற்கு குகி மற்றும் நாகா சமுதாய மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதன் காரணமாக கடந்த மே 3ஆம் தேதி மணிப்பூரில் மைத்தேயி, குகி சமுதாயத்தினருக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் கடந்த நான்கு மாதங்களாக நீடிக்கும் கலவரத்தில் 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர்.
ஆயிரக்கணக்கானோர் அகதிகளாகி நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்து உள்ளனர். ஏராளமான மைத்தேயி இன மக்கள் அசாம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு தப்பிச் சென்றனர்.
மணிப்பூரில் கலவரத்தைக் கட்டுப்படுத்த மாநில காவல் துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. வெளிமாநிலங்களில் இருந்து புதிய காவல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர். ஆனாலும் இதுவரை கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்தச் சூழலில் ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற கர்னல் நெக்டர் சன்ஜென்பாம் மணிப்பூர் காவல்துறையில் சிறப்பு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். மணிப்பூரில் நீடிக்கும் கலவரத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி மணிப்பூரின் சண்டல் பகுதியில் ராணுவ வீரர்களின் வாகனங்களைக் குறிவைத்து நாகா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 18 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். தாக்குதலுக்குப் பின்னர் நாகா தீவிரவாதிகள் அண்டை நாடான மியன்மாருக்குத் தப்பி ஓடினர்.
ராணுவ வீரர்களின் உயிரிழப்புக்குத் தகுந்த பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்தின் சிறப்பு படைப் பிரிவை சேர்ந்த 70 வீரர்கள் மியன்மாருக்குள் நுழைந்து நாகா தீவிரவாதிகளின் முகாம்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 38 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்தத் துல்லிய தாக்குதலை (சர்ஜிக்கல் ஸ்டிரைக்) ராணுவ கர்னல் நெக்சல் சன்ஜென்பாம் தலைமையேற்று நடத்தினார். இதற்காக அவருக்கு கீர்த்தி சக்ரா விருதும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக சவுரிய சக்ரா விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

