புதுடெல்லி: இந்தியாவில் ‘சிம்’ அட்டைகளை விற்பதற்கான புதிய விதிமுறைகளை அந்நாட்டின் தொலைத்தொடர்புத் துறை அறிவித்துள்ளது.
இந்தியாவில் பல தொலைத்தொடர்பு மோசடிச் செயல்கள் இடம்பெற்றதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. தொலைபேசி அழைப்புகள், குறுந்தகவல்கள் உள்ளிட்டவற்றின் வாயிலாகப் பல ஏமாற்றுச் செயல்கள் இடம்பெற்றிருக்கின்றன.
ஒரே நபரின் பெயர், அடையாளத்தின்கீழ் ஆயிரக்கணக்கான ‘சிம்’ அட்டைகள் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொலைத்தொடர்பு மோசடியை முறியடிக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 66,000 போலி வாட்ஸ்அப் கணக்குகளும் 67,000 சிம் அட்டை விநியோகிப்பாளர்களும் முடக்கப்பட்டதாக இந்தியாவின் தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி யாதவ் தெரிவித்தார்.
மேலும், ஏமாற்றுக்காரர்களுக்கு எதிராக 300 முதல் தகவல் அறிக்கைகள் பதிவுசெய்யப்பட்டு உள்ளதாகவும் 5.2 மில்லியன் ‘சிம்’ அட்டைகளின் கைப்பேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இவற்றோடு, ஏமாற்றுக்காரர்கள் பயன்படுத்திய ஏறக்குறைய 800,000 ‘வங்கிப் பணப்பை’ வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. போலி ‘சிம்’ அட்டைகள் விற்கப்படுவதை அடையாளம் காண புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
புதிய விதிமுறைகள் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் நடப்புக்கு வரும். அதை முன்னிட்டு, செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் இடம்பெறும் அனைத்து ‘சிம்’ அட்டை பரிவர்த்தனைகளையும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பதிவு செய்யவேண்டும்.
அங்கீகாரம் பெறாத விநியோகிப்பு நிறுவனங்களின் வாயிலாக ‘சிம்’ அட்டைகள் விற்கப்பட்டால் அவற்றுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனம் ஒரு மில்லியன் ரூபாய் அபராதம் செலுத்தவேண்டியிருக்கும்.