இந்தியாவில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் இணையத் தாக்குதலால் பாதிக்கப்பட்டு மில்லியன் கணக்கான டாலரை இழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு 83 விழுக்காடு நிறுவனங்கள் இணையத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன. இதில் 48 விழுக்காடு நிறுவனங்கள் பத்து அல்லது அதற்கும் மேற்பட்ட இணையத் தாக்குதல்களைச் சந்தித்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மில்லியன் கணக்கான டாலர் நட்டம் ஏற்பட்டதாக இணையத் தாக்குதல் பற்றிய அறிக்கை ஒன்று தெரிவித்தது.
இந்த அறிக்கையின் முடிவு, செவ்வாய்க்கிழமை அன்று வெளியிடப்பட்டது.
இணைய ஊடுருவல், போலி இணையத் தளங்கள், சங்கிலித் தொடர் தாக்குதல் போன்ற பல்வேறு முனைகளில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. இத்தகைய இணையத் தாக்குதலில் பணம் பறிப்பதே முக்கிய குறிக்கோளாக இருந்துள்ளது. தரவுகளைத் திருடுவது மற்றொரு நோக்கமாகும்.
ஏறக்குறைய 4,009 இணையப் பாதுகாப்பு நிபுணர்களிடையே ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் அனைவரும் சிறிய, நடுத்தர, பெரிய நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள்.
“இந்தியா தொடர்ந்து மின்னிலக்கமயமாகி வருவதால் வர்த்தகங்கள் தொழில்நுட்பத்தைச் சார்ந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இணையப் பாதுகாப்பை வலுப்படுத்துவது நிறுவனங்களுக்கு முக்கிய வேலையாக உள்ளது,” என்று கிளவுட்ஃபிளேர் என்ற நிறுவனத்தின் ஆசிய பசிபிக், ஜப்பான், சீனா வட்டாரத்துக்கான உதவி தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஜோனத்தன் டிக்சன் தெரிவித்தார்.
“தொழில்நுட்பத்தால் நிறுவனங்களுக்கு செலவு குறைந்தாலும் உறுதியான, நிலையான, பாதுகாப்பான இணையக் கட்டமைப்பை உருவாக்குவது அவசியமாகிறது,” என்றார்.
ஆய்வில் பங்கேற்றவர்களில் 52 விழுக்காட்டினர் மட்டுமே இணையத் தாக்குதலுக்குத் தயாராக இருப்பாகக் கூறியிருப்பது மற்றொரு அதிர்ச்சி தகவலாகும். இதற்கு செலவுகளை அவர்கள் காரணமாகச் சுட்டிக் காட்டியுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 12 மாதங்களில் இணையத் தாக்குதலால் ஒரு மில்லியன் டாலருக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக 42 விழுக்காடு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 27 விழுக்காடு நிறுவனங்கள் இரண்டு மில்லியன் டாலருக்கு மேல் இழந்துள்ளன.
இணையத் தாக்குதலுக்குப் பிறகு நிறுவனங்களின் செயல்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டியுள்ளது. 46 விழுக்காடு நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை குறைத்துள்ளன அல்லது மாற்றியமைத்துள்ளன. ஊழியர்களும் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். நிறுவனங்களை விரிவுபடுத்தும் திட்டங்களும் ஒத்தி வைக்கப்பட்டன.