புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் இந்த வாரம் ஜி20 உச்சசிலைக் கூட்டம் நடக்கிறது.
ஆனால் அதில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று ரஷ்ய அதிபர் புட்டினும் சீன அதிபர் ஸி ஜின்பின்னும் அறிவித்து இருக்கிறார்கள்.
இந்நிலையில், அவர்கள் அவ்வாறு அறிவித்து இருப்பது ஒன்றும் புதிதல்ல; வழக்கமானதுதான் என்று இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
அந்த இரண்டு தலைவர்களும் எடுத்துள்ள முடிவுக்கும் இந்தியாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் கூறியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்தது.
புதுடெல்லி மாநாடு செப்டம்பர் 9ஆம் தேதியும் 10ஆம் தேதியும் நடக்கிறது.
அதில் கருத்திணக்கம் ஒன்றைச் சாதித்து பிரகடனம் ஒன்றை வெளியிடும் நோக்கத்தில் ஜி20 தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் என்று இந்திய அமைச்சர் அந்தப் பேட்டியில் தெரிவித்தார். அந்தப் பேட்டி புதன்கிழமை ஒளிபரப்பப்பட்டது.
இந்தியாவுடன் கோபித்துக்கொண்டு ரஷ்ய, சீனத் தலைவர்கள் மாநாட்டைப் புறக்கணிக்கிறார்களா என்று கேட்டதற்குப் பதில் அளித்த அமைச்சர், தான் அப்படி நினைக்கவில்லை என்றும் அவர்களின் முடிவுக்கும் இந்தியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
ரஷ்ய, சீனத் தலைவர்கள் புதுடெல்லி மாநாட்டிற்கு வரமாட்டார்கள். இதன் காரணமாக கருத்திணக்கத்தை எட்டுவதும் பிரகடனத்தை வெளியிடுவதும் இயலாமல் போய்விடுமோ என்று கேட்டபோது. “பேச்சுவாரத்தை நடந்துவருகிறது,” என்று திரு ஜெய்சங்கர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
அதிபர் புட்டின், அதிபர் ஸி இருவரும் வரவில்லை என்றாலும் புதுடெல்லி ஜி20 மாநாட்டு எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கிறது என்று திரு ஜெய்சங்கர் கூறினார்.
“மிகவும் சிரமமான ஓர் உலகை சமாளிக்கும் சவாலை இந்தியா எதிர்நோக்கி உள்ளது.
“கொவிட்-19 தொற்று, பதற்றப் பிரச்சினைகள், பருவநிலை மாற்றங்கள், கடன் பிரச்சினை அரசியல் பிரச்சினைகள் என்று இப்போதைய உலகம் மிகவும் சிரமமான கட்டத்தில் இருக்கிறது,” என்று இந்திய அமைச்சர் தெரிவித்தார்.
“புதுடெல்லி கூட்டத்தில் அமெரிக்க அதிபர் பைடன் கலந்துகொள்கிறார். உலக வங்கியை சீரமைப்பதில் அதிபர் பைடன் ஒருமித்த கவனம் செலுத்துவார்.
“பருவநிலை மாற்றங்கள், உள் கட்டமைப்புத் திட்டங்கள் ஆகியவற்றுக்கு அளிக்கும் கடனை அதிகப்படுத்தும்படி இதர அனைத்துலக வளர்ச்சி வங்கிகளை அமெரிக்க அதிபர் வலியுறுத்துவார்,” என்று வெள்ள மாளிகை தெரிவித்துள்ளது
மின்னிலக்கமய பிரச்சினைகள், உணவுப் பாதுகாப்பு ஆகியவை பற்றி விவாதிக்கலாம் என்று ஜப்பானிய பிரதமர் ஃபூமியோ கிஷிடா நம்புகிறார்.
மின்னிலக்க நாணயச் சொத்துகளை ஒழுங்குபடுத்துவதற்கான ஓர் உலகளாவிய ஏற்பாட்டு முறை பற்றிய பேச்சுவார்த்தை நடந்து வருவதாக இந்தியா அறிவித்துள்ளது.

