நீமுச்: வரதட்சணை கொடுக்காததால் மனைவியை கயிற்றால் கட்டி கிணற்றில் தள்ளி காணொளி எடுத்துள்ளார் ஒரு கணவர்.
இச்சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் நடந்துள்ளது. ராகேஷ் கிர் என்பவர் மனைவி உஷாவிடம் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்து வந்தார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
பெருந்தொகை கேட்டு கொடுக்காதபோது அவரைக் கயிற்றால் கட்டி கிணற்றில் தள்ளிவிட்டார். கயிற்றின் ஒருபகுதியை கிணற்றின் மேல் பகுதியில் இருந்த மரத்தில் கட்டிவிட்டார்.
கிணற்றுக்குள் இருந்த அவரது மனைவி உயிருக்குப் பயந்து கூச்சலிட்டார். அதனை காணொளி எடுத்து மனைவியின் உறவினர்களுக்கு அனுப்பி வைத்தார் ராகேஷ் கிர்.
அதை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக கிராமத்திற்கு வந்தனர். அங்கிருந்தவர்களிடம் மகளைக் காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையே, இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று உஷாவை மீட்டதோடு கணவரைக் கைதுசெய்து விசாரணை நடத்துகின்றனர்.
“கைது செய்யப்பட்ட ராகேஷ் கிர், தனது மனைவியிடம் ரூ. 5 லட்சம் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தி உள்ளார். ஒருகட்டத்தில் அவரை கயிற்றால் கட்டி கிணற்றில் தள்ளிவிட்டுள்ளார்,” என்று காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

