தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே மீது வழக்குப் பதிவு

2 mins read
548ea607-f5b9-4b89-8381-856997fd35d0
தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கர்நாடக அமைச்சர் பிரியங் கார்கே ஆகியோர் மீது உத்தரப் பிரதேச மாநிலத்தின் ராம்பூரில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

ராம்பூர்: தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் ஒரு மேடையில், சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசியிருந்தார்.

அதைக் கண்டித்து உத்தரப் பிரதேசத்தின் ராம்பூர் காவல்நிலையித்தில் அம்மாநிலத்தின் வழக்கறிஞர்கள் இருவர் புகார் கொடுத்துள்ளனர். அதையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

உதயநிதி பேசிய கருத்துக்கு கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே ஆதரவு தெரிவித்ததற்காக, அவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ராம்பூர் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ஹர்ஷ் குப்தா மற்றும் ராம் சிங் லோதி ஆகியோர், ஊடகங்களில் வெளிவந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்த பேச்சு தங்களின் மனதைப் புண்படுத்திவிட்டது என அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, சென்னையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி பேசிய போது, ‘சனாதனத்தை எதிர்ப்பதைவிட ஒழிப்பதே, நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்’ என்று பேசினார். இதற்கு குறிப்பிட்ட சிலர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

உதயநிதியின் கருத்தினை ஆதரித்து பேசிய கர்நாடகா அமைச்சர் பிரியங்க் கார்கே, “சகமனிதனை மனிதனாக மதிக்காத, சம உரிமை அளிக்காத, எந்த மதமும் நோயைப் போன்றது. உதயநிதிக்கு அவர் நினைக்கும் கருத்தைச் சொல்ல உரிமை இருக்கிறது,” எனக் கூறியிருந்தார்.

இதனிடையே, தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்மம் குறித்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், உதயநிதிக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூடுக்கு முன்னாள் நீதிபதிகள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் என 262 பேர் கடிதம் எழுதியிருந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் அந்தப் புகாரில் அவர்கள், அமைச்சர் உதயநிதி பேசிய பேச்சு சம்பந்தமாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

முன்னதாக பீகாரின் முஸாஃபூர் நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர் புகார் அளித்திருந்தார். அத்துடன் அம்மாநிலத்தின் பாஜக தலைவர் சம்ராட் சௌத்ரி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சை வன்மையாகக் கண்டித்திருந்தார்.