521 லட்சம் டன் அரிசி கொள்முதல் செய்ய இந்தியா இலக்கு

2 mins read
5c739886-4347-484a-880b-59ff9df69d6d
படம்: - பிக்சாபே

தஞ்சாவூர்: நடப்பாண்டில் 521 லட்சம் டன் அரிசி கொள்முதல் செய்ய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது என்று இந்திய உணவுக் கழகத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அசோக் குமார் கே. மீனா தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலையிலுள்ள இந்திய உணவுக் கழகக் கோட்ட அலுவலகத்தில் புதன்கிழமை சட்ட மாமேதை அம்பேத்கர் சிலையைத் திறந்து வைத்துப் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தியாவில் அரிசி உற்பத்தியில் சுயசார்பு நிலை எட்டப்பட்டுள்ளது. நடப்பாண்டில் அரிசி உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாது. நாட்டின் ஒரு பகுதியில் உற்பத்தி குறைவு ஏற்பட்டாலும், அதற்கு ஈடாக மற்ற பகுதிகளில் உற்பத்தி இருக்கும்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 570 லட்சம் டன் அரிசி கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போதைய நிலையில் கோதுமை உற்பத்தியும் போதுமான அளவுக்கு இருக்கிறது.

கடந்த ஆண்டு கோதுமை தேவை 262 லட்சம் டன்னாக இருந்த நிலையில், போதுமான அளவுக்கு கொள்முதல் செய்யப்பட்டது. இதேபோல கடந்த ஆண்டு கரீப் கல்யாண் யோஜனா உள்ளிட்ட திட்டங்களுக்கு 400 லட்சம் டன் அரிசி தேவைப்பட்ட நிலையில், அதைவிட கூடுதலாக 570 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டது. அதாவது 170 லட்சம் டன் கூடுதலாக அரிசி கொள்முதல் செய்யப்பட்டது.

மத்திய அரசின் சிறுதானிய ஆண்டு இயக்கத்தையொட்டி, கேழ்வரகு, துவரம் பருப்பு, கம்பு உள்ளிட்ட சிறு தானியங்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் சிறு தானியங்களைக் கொள்முதல் செய்ய மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் சிறுதானியங்கள் கொள்முதல் செய்யும் பணி ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டது. இதேபோல ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் சிறுதானிய கொள்முதல் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்