மோடி அறைகூவல்: நம்பிக்கை குறைபாட்டை நன்னம்பிக்கையாக மாற்றுவோம்

மோடி அறைகூவல்: நம்பிக்கை குறைபாட்டை நன்னம்பிக்கையாக மாற்றுவோம்

2 mins read
b3778fc8-a82d-45e2-b147-e8172afe12af
ஜி20க்கு இந்தியா தலைமை ஏற்றது முதல் இந்தியாவில் 60க்கும் மேற்பட்ட நகர்களில் இந்த ஆண்டில் 200 நிகழ்ச்சிகளை புதுடெல்லி நடத்தி இருக்கிறது என்றும் இதன்மூலம் இந்திய மக்களுக்கே உரித்தான ஒன்றாக ஜி20 ஆகிவிட்டது என்றும் இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்தார். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: உக்ரேன்மீது ரஷ்யா தொடுத்த போர் காரணமாக உலக அளவில் நம்பிக்கை குறைந்துவிட்டது.

அந்த நம்பிக்கைக் குறைபாட்டை நன்னம்பிக்கையாக மாற்றி 21வது நூற்றாண்டில் எல்லாரும் சேர்ந்து நடைபோடுவோம் என்று உலகத் தலைவர்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறைகூவல் விடுத்துள்ளார்.

இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் சனிக்கிழமை தொடங்கிய ஜி20 மாநாட்டின் தொடக்கத்தில் பேசிய அவர், இந்த 21வது நூற்றாண்டு, உலகிற்குப் புதிய இலக்கை நிர்ணயிப்பதற்குப் பொருத்தமான ஒரு காலகட்டம் என்றார்.

பழமைான சவால்களுக்குப் புதிய தீர்வுகளைக் காண நமக்கு இப்போது காலம் கனிந்துள்ளது என்று திரு மோடி குறிப்பிட்டார்.

ஆகையால் மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறைகளைக் கைக்கொண்டு நாம் நம் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டி இருப்பதாக அவர் தெரிவித்தார்.

உலகில் கொவிட்-19க்குப் பிறகு இப்போது நம்பிக்கை குறைபாட்டுப் பிரச்சினை பூதாகர பிரச்சினையாகி இருக்கிறது.

உக்ரேன் போர் காரணமாக அந்த நம்பிக்கை பற்றாக்குறை அதிகமாகிவிட்டது. கொவிட்-19 கிருமியை வீழ்த்தியதைப் போலவே இந்தப் பிரச்சினைக்கும் தீர்வுகாண முடியும் என்று இந்தியப் பிரதமர் கூறினார்.

ஜி20க்குத் தலைவர் என்ற முறையில் இந்தியா ஒரு கோரிக்கையை முன்வைக்கிறது.

அதாவது உலக அளவில் நிலவும் நம்பிக்கைக் குறைபாட்டை ஒருவர்மீது மற்றொருவர் கொண்டுள்ள நன்னம்பிக்கையாக உலகம் மாற்றிக் காட்ட வேண்டும். எல்லாரும் சேர்ந்து நடைபோட இது தக்க தருணம் என்று திரு மோடி உரையாற்றினார்

ஜி20க்கு இந்தியா தலைமை ஏற்றது முதல் இந்தியாவில் 60க்கும் மேற்பட்ட நகர்களில் இந்த ஆண்டில் 200 நிகழ்ச்சிகளை புதுடெல்லி நடத்தி இருக்கிறது.

இதன்மூலம் இந்திய மக்களுக்கே உரித்தான ஒன்றாக ஜி20 ஆகிவிட்டது என்றும் திரு மோடி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்