தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அயோத்தி சரயு நதியில் உல்லாசக் கப்பல் சேவை தொடங்கியது

1 mins read
fb6f9dc3-0ddf-4a57-82ff-ff0637ea1dd8
சரயு நதியில் உல்லாசக் கப்பல் பயணம் - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலத்தில் அயோத்தி நகரில் உள்ள பிரபலமான சரயு நதியில் வெள்ளிக் கிழமை உல்லாசக் கப்பல் போக்குவரத்துத் தொடங்கியது.

அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்படுகிறது.

இந்தக் கோயில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திறக்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் பிறகு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு வருவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் அயோத்தி நகரம் முழு வசதிகளுடன் தயாராகி வருகிறது. அந்நகரின் உள்கட்டமைப்பு வசதிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சரயு நதியில் வெள்ளிக்கிழமை உல்லாசக் கப்பல் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இந்தச் சேவை பற்றி விளக்கிய அயோத்தி மாநகராட்சி ஆணையர் விஷால் சிங், “ஜடாயு என்ற பெயரில் அயோத்தி சரயு நதியில் வெள்ளிக்கிழமை சொகுசுக் கப்பல் சேவையை தொடங்குகிறோம். இந்தக் கப்பலில் ராமாயணத்தை சித்திரிக்கும் ஓவியங்கள் தீட்டப்பட்டு உள்ளன,” என்றார்.

நயா படித்துறையில் இருந்து குப்தர் படித்துறைக்கு சொகுசுக் கப்பல் இயக்கப்படுகிறது. சொகுசுக் கப்பல் பயணம், சரயு நதியில் நடைபெறும் தீபாராதனையை பார்க்கும் வகையில் இருக்கும்.

சொகுசுக் கப்பல் சேவையை நடத்தும் ஒப்பந்தத்தை பெற்றுள்ள அயோத்தியா க்ரூசே லைன்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் ராகுல் சர்மா, “ஜடாயு சொகுசுக் கப்பலில் ஒரே நேரத்தில் நூறு பேர் பயணம் செய்ய முடியும். ஒரு நபருக்கு தலா ரூ.300 கட்டணம் நிர்ணயித்துள்ளோம்,” என்று கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்