தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருப்பதி பக்தர்களை அச்சுறுத்திய ஐந்தாவது சிறுத்தை கூண்டில் சிக்கியது

1 mins read
37e84eba-8065-4905-bdfd-5cddeb47c9ec
திருப்பதியில் அலிபிரி மலைப்பாதை 7வது மைல் பகுதியில் 5வது சிறுத்தை நேற்று அதிகாலை கூண்டில் சிக்கியது. - படம்: ஊடகம்

திருப்பதி: ஆந்திர மாநிலத்தின் கர்னூலை சேர்ந்த குடும்பத்தினர், கடந்த ஜூன் மாதம் திருப்பதி அலிபிரியில் இருந்து திருமலைக்கு நடைப்பயணமாகச் சென்றனர்.

அப்போது அக்குடும்பத்தைச் சேர்ந்த கவுஷிக் என்ற சிறுவனை சிறுத்தைத் தாக்கியது. ஆனால், அருகில் இருந்தவர்கள் சிறுத்தையை விரட்டிவிட்டதால் சிறுவன் காயங்களுடன் உயிர் தப்பினான்.

இன்னொரு சம்பவத்தில் ஆகஸ்ட் 11ஆம் தேதி இரவு, நெல்லூரைச் சேர்ந்த லக்‌ஷிதா என்ற சிறுமியை சிறுத்தைக் கவ்விக் கொண்டு ஓடியது. மறுநாள் அச்சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.

பக்தர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்துவந்த அந்தச் சிறுத்தையைப் பிடிப்பதற்காக காட்டின் பல பகுதிகளில் கூண்டு வைக்கப்பட்டது. அதையடுத்து அந்தக் கூண்டுகளில் நான்கு சிறுத்தைகள் சிக்கியுள்ளன.

இந்நிலையில் அலிபிரி மலைப்பாதையில் லட்சுமி நரசிம்மர் கோயில் அருகில், அதாவது 7வது மைல் பகுதியில் 5வது சிறுத்தை நேற்று அதிகாலை கூண்டில் சிக்கியது.

கூண்டில் சிக்கிய இந்த 3 வயது பெண் சிறுத்தையை வனத்துறையினர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவுக்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். கடந்த 75 நாட்களில் பிடிபட்ட 5-வது சிறுத்தை இது என்று வனத்துறையினர் கூறினர்.

இந்நிலையில் பக்தர்களின் பாதுகாப்புக்குத் தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் இந்தப் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு காணப்படும் என்றும் திருமலை திருப்பதி ஆலய நிர்வாகம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்