பயிற்சியின்போது விபரீதம்: தலையில் ஈட்டி பாய்ந்து மாணவர் பலி

1 mins read
79cb88a1-8656-42fe-87ef-61c7e93d8f8a
மகாராஷ்டிராவில் நிகழ்ந்த சம்பவத்தில் உயிரிழந்த மாணவரின் வயது 15. - படம்: இந்திய ஊடகம்

மும்பை: சக மாணவர் எறிந்த ஈட்டி தலையில் துளைத்து 15 வயது மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் புதன்கிழமை பிற்பகல் மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் நிகழ்ந்தது. இறந்த மாணவரின் பெயர் ஹுஜெஃபா டேவார் என்று தெரியவந்தது. 

பூரார் என்னும் இடத்தில் உள்ள ஐஎன்டி ஆங்கிலப் பள்ளியின் திடலில் ஈட்டி எறிதல் பயிற்சி நடைபெற்றுக் கொண்டு இருந்தது.

பயிற்சியில் பங்கேற்றிருந்த மாணவர் ஹுஜெஃபா, ஒரு கட்டத்தில் தமது காலணியில் கயிற்றை சரிசெய்வதற்காகக் கீழே குனிந்தார்.

எதிர்த்திசையில் இருந்த மற்றொரு மாணவர் நீளமான ஈட்டியை எறிந்தார். அது தம்மை நோக்கி வருவதை அறியாத ஹுஜெஃபா, தலை நிமிர்ந்தபோது ஈட்டி அவரது தலையைத் துளைத்தது. சம்பவ இடத்திலேயே அந்த மாணவர் நிலைகுலைந்து விழுந்தார்.

தலையிலிருந்து ரத்தம் அதிகமாக வெளியேறியது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார். விபத்து என்று இச்சம்பவத்தைப் பதிவு செய்த காவல்துறை, வேறு ஏதும் நோக்கம் இருந்ததா என்பது குறித்து விசாரித்து வருகிறது.

ஈட்டி எறிந்த மாணவருக்கும் மரணமடைந்த மாணவருக்கும் இடையில் ஏதாவது முன்விரோதம் இருந்ததா என்று விசாரிக்கப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதனால் ஈட்டியை எறிந்த மாணவனிடம் அவனது பெற்றோர் முன்னிலையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்
விபத்து