மோடி: உலக நாடுகளுக்கு வானிலை தகவல்கள்

மோடி: உலக நாடுகளுக்கு வானிலை தகவல்கள்

2 mins read
ac2e109d-43aa-464d-b4d0-0b0896396ea0
ஜி20 உச்சநிலை மாநாட்டில் கலந்துகொண்ட உலகத் தலைவர்களுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. - படம்: இபிஏ

புதுடெல்லி: டெல்லியில் சனிக்கிழமை ஜி-20 உச்சநிலை மாநாடு தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக முதல் அமர்வு கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உலக மக்களின் நலன் கருதி இந்தியாவின் சார்பில் ‘ஜி20 சுற்றுச்சூழல், பருவநிலை செயற்கைக்கோள் கண்காணிப்பு’ திட்டம் செயல்படுத்தப்படும். இந்த செயற்கைக்கோள் திட்டத்தின் மூலம் பருவநிலை, வானிலை தொடர்பான தகவல்கள் உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளார்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஜி-20 உச்சி மாநாட்டின் வாயிலாக சில ஆலோசனைகளை இந்தியா முன்வைக்கிறது. அதாவது இந்தியாவை போன்று உலக நாடுகள், பெட்ரோலில் 20 சதவீதம் வரை எத்தனாலை கலக்கலாம் அல்லது வேறு எரிபொருள் கலவை குறித்து ஆய்வு செய்யலாம். இதன்மூலம் எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். அதோடு சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும். இதை கருத்தில் கொண்டு அனைத்துலக பசுமை எரிசக்தி கூட்டணியை உருவாக்கி உள்ளோம். இதில் அனைத்து நாடுகளும் இணைய வேண்டும் என்று இந்தியா அழைப்பு விடுக்கிறது.

சந்திரயான் 3 திட்டம்: இந்தியாவின் சந்திரயான் 3 திட்டம் வெற்றி அடைந்திருக்கிறது. இதன்மூலம் சேகரிக்கப்படும் அரிய தகவல்கள் ஒட்டுமொத்த உலகத்துக்கும் பலன் அளிக்கும். உலக மக்களின் நலன் கருதி ‘ஜி20 சுற்றுச்சூழல், பருவநிலை செயற்கைக்கோள் கண்காணிப்பு’ திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்.

இந்த செயற்கைக்கோள் திட்டத்தின் மூலம் பருவநிலை, வானிலை தொடர்பான தகவல்களை அனைத்து நாடுகளுடனும் இந்தியா பகிர்ந்துகொள்ளும்.

குறிப்பாக தெற்கு நாடுகள் தொடர்பான வானிலைத் தகவல்கள் அந்த நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும். இந்த திட்டத்தில் ஜி-20 உறுப்பு நாடுகள் அனைத்தும் இணைய வேண்டும் என்று இந்தியா அழைப்பு விடுக்கிறது என்றார் பிரதமர் மோடி.

குறிப்புச் சொற்கள்