‘இண்டியா’ கூட்டணியின் முதல் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் புதன்கிழமை நடக்கிறது

‘இண்டியா’ கூட்டணியின் முதல் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் புதன்கிழமை நடக்கிறது

2 mins read
d8c70467-1f8f-4d96-ad93-bc7ae53928e2
படம்: - ஊடகம்

புதுடெல்லி: ‘இண்டியா’ கூட்டணியின் மூன்றாவது கூட்டம் அண்மையில் மும்பையில் நடந்தது.

இதில் 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டது.

கூட்டணியின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை வகுப்பதற்காக இந்தக் குழு ஏற்படுத்தப்பட்டது.

இந்தக் குழுவின் முதல் கூட்டம் புதன்கிழமை டெல்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் வீட்டில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் வெடித்த சனாதனம் தொடர்பான சர்ச்சை, கூட்டணி தலைவர்கள் இடையே உள்ள வேறுபாடுகள் குறித்து பேசப்படும் என்று கூறப்படுகிறது.

‘இண்டியா’ கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தில் பல்வேறு மாறுபட்ட கொள்கை வேறுபாடு இருந்ததால் ஒருமித்த கருத்து உருவாகவில்லை. சில கட்சி தலைவர்களிடம் அதிருப்தி ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இருப்பினும் பெரும்பாலான மாநிலங்களில் ‘இண்டியா’ கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் அனைத்தும் ஒரு மாதத்தில் முடிக்கப்படும் என்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் மக்கள் பிரச்சினைகள் குறித்து பொதுக்கூட்டங்கள் விரைவில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 400 முதல் 440 தொகுதிகளில் பொது வேட்பாளரை நிறுத்த வியூகம் வகுக்கப்பட்டு உள்ளது.

கூட்டணியின் தேர்தல் அறிக்கை, கொள்கை விளக்கக் குறிப்புகளை அக்டோபர் 2ஆம் தேதிக்குள் தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

திட்ட அறிவிப்புகளை டெல்லியில் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி நினைவிடத்தில் வெளியிடவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்