தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறுவனைப் பழிவாங்குவதற்காக கார் ஏற்றிக் கொலை செய்த உறவினர்

2 mins read
8e26e294-735a-4e33-a07a-4bd17e2333cf
உறவினரே கார் ஏற்றி சிறுவனைத் திட்டமிட்டு கொலை செய்தது காணொளிப் படக்கருவிக் காட்சியால் அம்பலமானது. - படம்: இந்திய ஊடகம்

திருவனந்தபுரம்: கேரளாவில் மனைவி முன்பு தன்னை அவமானப்படுத்திய சிறுவனை, உறவினரே கார் ஏற்றி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெருஞ்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவன் ஆதிசேகர். கடந்த சில நாள்களுக்கு முன்பு அந்தச் சிறுவன் கார் விபத்தில் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தை காவல்துறை விபத்து வழக்காகப் பதிவுசெய்த நிலையில் அந்தச் சிறுவனின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், விபத்து குறித்துக் காவல்துறைக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

அதனால், விபத்து நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்புப் படக்கருவியில் பதிவான காட்சிகளைக் காவல்துறை ஆராய்ந்தது.

சாலையின் ஓரம் நின்றுகொண்டிருந்த கார் ஒன்று, அச்சிறுவனைப் பின்தொடர்ந்து சென்று மோதுவது போன்ற காட்சிகளும் படுகாயமடைந்த சிறுவனைப் பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் காட்சிகளும் அதில் பதிவாகியிருந்தன.

இந்தக் காட்சிகளின் அடிப்படையில் காவல்துறை விசாரணை மேற்கொண்டது.

அந்தக் கார் சிறுவனின் உறவினரான பிரியரஞ்சன் என்பவருக்குச் சொந்தமானது என்பதும் அவர் தான் அச்சிறுவனைக் கார் ஏற்றிக் கொலை செய்தார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு கோயிலின் சுவரில் பிரியரஞ்சன் சிறுநீர் கழித்துள்ளார்.

இதைக் கண்ட சிறுவன், பிரியரஞ்சனின் குடும்பத்தார் முன்னிலையில் அவரை அவமானப்படுத்தியதாகக் கூறப்பட்டது.

இதனால் மிகுந்த மனஉளைச்சலில் இருந்த பிரியரஞ்சன் அச்சிறுவனைக் கொலைசெய்யத் திட்டமிட்டார்.

சிறுவன்மீது கார் ஏற்றியது மட்டுமின்றி, பிரியரஞ்சனே அவனை மருத்துவமனையில் அனுமதித்து நாடகமாடினார்.

தொடர்ந்து சிறுவனின் இறுதி சடங்குகளிலும் அவர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்