‘ஓசிஐ’ ரத்து: வெளிநாடுவாழ் இந்தியர் நீதிமன்றத்தில் முறையீடு

‘ஓசிஐ’ ரத்து: வெளிநாடுவாழ் இந்தியர் நீதிமன்றத்தில் முறையீடு

1 mins read
4d4f140f-9325-44f6-926b-062f5e675ce2
ஓசிஐ ரத்து செய்யப்பட்டதற்கு விளக்கம் கொடுக்கப்படவில்லை என்று சுவீடனில் வசிக்கும் பேராசிரியர் அஷோக் ஸ்வெய்ன் தெரிவித்துள்ளார். - படம்: கோப்புப் படம்

புதுடெல்லி: சுவீடனில் வசிக்கும் பேராசிரியரான அஷோக் ஸ்வெய்ன் என்பவர், தமது வெளிநாடுவாழ் இந்தியர் குடியுரிமை அட்டை (ஓசிஐ) ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த ஜூலை 30ஆம் தேதி அவரது ஓசிஐ ரத்து செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், இதில் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து விளக்கம் கேட்டுள்ளது.

பின்னர் வழக்கை நவம்பர் 9ஆம் தேதிக்கு நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஒத்திவைத்தார்.

நீதிமன்றத்தில் முன்னிலையான திரு ஸ்வெயினின் வழக்கறிஞரான ஆடில் சிங் போபாரை, இதற்கு முன்பு இதே போன்ற ரத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் கடந்த பிப்ரவரி மாதத்தில் உயர் நீதிமன்றத்தை தமது கட்சிக்காரர் அணுகியிருந்ததாகவும் இதனால் அந்த உத்தரவு ஜூலை 30ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

ஓசிஐ ரத்து செய்யப்படுவதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை என்றார் அவர்.

உடல்நலமில்லாத தாயாரை ஒரே மகனான திரு ஸ்வெயினால் கடந்த மூன்று ஆண்டுகளாக பார்க்க முடியவில்லை என்றும் வழக்கறிஞர் சொன்னார்.

திரு ஸ்வெய்ன் இந்தியாவுக்கு எதிராக பல்வேறு பொது அரங்கங்களில் பிரசாரம் செய்ததால் அவர் கறுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்