தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மோடி எடுத்த முடிவு சரியானது; ரஷ்ய அதிபர் புட்டின் பாராட்டு

2 mins read
6d8f549d-2215-4677-9004-63a83fec7f28
ரஷ்யாவின் தூரக் கிழக்கு நகரான விளாடிவஸ்டாக்கில் செவ்வாய்க்கிழமையன்று கிழக்கத்திய பொருளியல் அரங்கம் என்ற அமைப்பின் கூட்டத்தில் ரஷ்ய அதிபர் புட்டின் உரையாற்றினார். - படம்: ஏஎஃப்பி 

விளாடிவஸ்டாக், ரஷ்யா: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் பாராட்டினார்.

இந்தியப் பிரதமர், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற ஒரு செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறார். இதன்மூலம் அவர் சரியான காரியத்தைச் செய்கிறார் என்று ரஷ்யாவின் தூரக் கிழக்கு நகரான விளாடிவஸ்டாக்கில் செவ்வாய்க்கிழமை திரு புட்டின் தெரிவித்தார்.

கிழக்கத்திய பொருளியல் கருத்தரங்கம் (இஇஎஃப்) என்ற ஒரு நிகழ்ச்சியில் அதிபர் புட்டின் பேசினார்.

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் கார்கள் பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அப்போது திரு புட்டின் இந்தியப் பிரதமரைப் பாராட்டினார்.

ஒரு நாட்டில், உள்நாட்டில் தயாரிக்கப்படும் மோட்டார் வாகனங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.

பிரதமர் மோடி தலைமைத்துவத்தின்கீழ் பல கொள்கைகளை நடைமுறைப்படுத்தி இந்தியா இதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என்று திரு புட்டின் குறிப்பிட்டார்.

ரஷ்யாவில் முன்பு உள்நாட்டில் கார்கள் தயாரிக்கப்படவில்லை. ஆனால், இப்போது தயாரிக்கப்படுகின்றன.

மெர்சிடிஸ் அல்லது ஆவ்டி போன்ற கார்களை 1990களில் அதிக விலை கொடுத்து நாம் வாங்கினோம். ஆனால், இப்போது ரஷ்யா தயாரிக்கும் கார்கள் அந்தக் கார்களைவிட நவீனமாகத் திகழ்கின்றன.

இதில் ஒன்றும் புதுமை இல்லை. இதில் இந்தியா எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் மோட்டார் வாகனங்களை உள்நாட்டில் பயன்படுத்த இந்தியா இப்போது ஒருமித்த கவனம் செலுத்தி வருகிறது.

இந்தியாவில் தயாரிப்போம் என்ற செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தி அதன்மூலம் நரேந்திர மோடி சரியான செயலைச் செய்து வருகிறார் என்று புட்டின் பாராட்டினார்.

“ரஷ்யா சொந்தமாக கார்களைத் தயாரிக்கிறது. அவற்றை ரஷ்யா பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் உலக வர்த்தக நிறுவனத்துக்கான நம்முடைய கடப்பாடுகளை நாம் மீறிவிட்டதாகப் பொருள்படாது,” என்று அதிபர் புட்டினை மேற்கோள்காட்டி ரஷ்ய இணையத்தளத்தில் இடம்பெற்றிருந்த ஒரு செய்தி தெரிவித்தது.

ஐரோப்பிய ஒன்றியம், சவூதி அரேபியா, இந்தியா ஆகியவற்றுடன் சேர்ந்து புதிய ஒரு பொருளியல் வழித்தடத்தை ஏற்படுத்த அமெரிக்கா மும்முரமாகக் களத்தில் குதித்து இருக்கிறது.

அத்தகைய ஓர் ஏற்பாடு ரஷ்யாவுக்கும் பலன் அளிக்கும் என்றும் அதன்மூலம் தளவாடப் போக்குவரத்து உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் என்றும் பல ஆண்டுகளாகவே இத்தகைய ஒரு திட்டம் பற்றி விவாதிக்கப்பட்டு வருவதாகவும் திரு புட்டின் தெரிவித்தார்.

புதுடெல்லியில் நடந்த ஜி20 உச்சநிலை மாநாட்டையொட்டி இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு சிற்றரசுகள், சவூதி அரேபியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை புரிந்துணர்வுக் குறிப்பு ஒன்றில் கையெழுத்திட்டன.

இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளியல் வழிப்பாதையை உருவாக்குவது அந்தப் புரிந்துணர்வுக் குறிப்பின் நோக்கம்.

குறிப்புச் சொற்கள்