20 வயதில் மாடு திருடியவர் 77 வயதில் பிடிபட்டார்

20 வயதில் மாடு திருடியவர் 77 வயதில் பிடிபட்டார்

1 mins read
2e51f293-a0b5-4e63-b8d0-792c235ec8c4
கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் வசிக்கும் மல்லிதராவ் குல்கர்னி என்ற விவசாயியின் இரண்டு எருமை மாடுகளையும் ஒரு கன்றுக்குட்டியையும் யாரோ திருடிச் சென்றுவிட்டனர் - படம்: தமிழ் முரசு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் உள்ள பால்கி என்ற பகுதியைச் சேர்ந்த மல்லிதராவ் குல்கர்னி என்ற விவசாயியின் இரண்டு எருமை மாடுகளையும் ஒரு கன்றுக்குட்டியையும் யாரோ திருடிச் சென்றுவிட்டனர். அதன் தொடர்பில் உரிமையாளர் காவல்துறையில் புகார் கொடுத்தார்.

அதையடுத்து கிஷன் சந்தர், கணபதி விட்டல் வாக்மோர் என்ற இரண்டு பேரை காவல்துறை கைது செய்தது. இந்தச் சம்பவம் 1965ஆம் ஆண்டு நிகழ்ந்தது. அப்போது சந்தேகப்பேர்வழிகள் இருவருக்கும் வயது 20.

வழக்கு விசாரணையை அடுத்து அந்த இருவருக்கும் பிணை அனுமதிக்கப்பட்டது. அதைப் பயன்படுத்தி இருவரும் தலைமறைவாகிவிட்டனர்.

பிறகு 2006ஆம் ஆண்டு கிஷன் சந்தர் இறந்துவிட்டார். அது பற்றி தெரியவந்ததும் அதிகாரிகள் மற்றொரு குற்றவாளியை தீவிரமாகத் தேடத் தொடங்கினர்.

கடைசியில் இரண்டாவது குற்றவாளியான கணபதி வாக்மோர் மகாராஷ்டிரா மாநிலத்தில் லத்தூர் என்ற மாவட்டத்தில் உள்ள தகலகான் என்ற கிராமத்தில் பிடிபட்டார். அவருக்கு இப்போது வயது 77 ஆகிவிட்டது. அவர் முறைப்படி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

விசாரணை நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்