மனித உறுப்பு விற்பனை: பெங்களூரு வீதியில் ஓடிய ஆப்பிரிக்கர்களை விரட்டிப் பிடித்த தமிழக அதிகாரிகள்

2 mins read
702592d0-dbf7-4d36-a9e6-0a9f8f8ba7ce
சிறுநீரகம், நுரையீரல்களுக்காக மோசடிப் பேர்வழிகள் ரூ.5 கோடி வரை பணம் பெற்று இருக்கிறார்கள் என்று காவல்துறை தெரிவித்தது. - படம்: தமிழக ஊடகம் 

சென்னை: சென்னை நகர காவல்துறையினர் ஐந்து பேரைக் கைது செய்து இருக்கிறார்கள். அவர்களில் இரண்டு பேர் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள். மற்ற மூவர் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள்.

பிரபலமான மருத்துவமனைகளின் இணையத்தளப் பக்கங்களைப் போல போலி பக்கங்களை உருவாக்கி, அவற்றைப் பயன்படுத்தி அந்த ஐவர் கும்பல் பெரும் பணத்தைச் சுருட்டி இருக்கிறது.

அவர்கள் உறுப்பு நன்கொடையாளர்கள் போல் நடித்து மக்களிடம் இருந்து பணத்தைப் பறித்து இருக்கிறார்கள் என்றும் காவல்துறை தெரிவித்தது.

தமிழ்நாட்டு காவல்துறையின் சிறப்புப் படைப் பிரிவினர் பெங்களூரு வீதிகளில் தப்பி ஓடிய அந்த இரண்டு ஆப்பிரிக்கர்களையும் விடாமல் விரட்டிச் சென்று பிடித்து இருக்கிறார்கள்.

தமிழ்நாடு காவல்துறையினர் தங்களைத் தேடி வருகிறார்கள் என்று தெரிந்துகொண்டதும் அந்த இருவரும் தப்பி ஓட முயன்றார்கள்.

நைஜீரியாவைச் சேர்ந்த ஜெரிமியா, 50, உகாண்டாவைச் சேர்ந்த ஒலிவியா, 25, பெங்களூருவைச் சேர்ந்த மோனிகா, 56, ராம் பதூர் ரீங், 31, இரோம் ஜென்சன் சிங், 21, ஆகியோர் பிடிபட்ட ஐந்து பேர் என்று காவல்துறை தெரிவித்தது.

சென்னையில் செயல்படும் ஒரு மருத்துவமனைக்கு ஒரு தகவல் தெரியவந்தது. மாற்று உறுப்பு அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் சில நோயாளிகள் அந்த மருத்துவமனையின் இணையத்தள முகவரியைப் போன்ற போலி முகவரியைப் பார்த்து அதிலிருந்த தொலைபேசி எண்ணுடன் தொடர்புகொண்டு இருக்கிறார்கள்.

தங்களிடம் சிறுநீரகம், நுரையீரல் போன்ற மனித உறுப்புகள் இருப்பதாகவும் பணம் கொடுத்தால் அவற்றை விற்கத் தயாராக இருப்பதாகவும் அந்த மோசடிப்பேர்வழிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

மருத்துவ வல்லுநர்கள் போல் நடித்து பல வங்கிக் கணக்குகள் மூலமாக அந்த மோசடிக்காரர்கள் பணத்தைப் பெற்று இருக்கிறார்கள்.

இப்படி அவர்கள் ரூ. 5 கோடி வரை சம்பாதித்து இருக்கிறார்கள். கைப்பேசிகள், வங்கிக் கணக்குகள், ஏடிஎம் அட்டைகள், மடிக்கணினிகள், கணினித் தகவல் சேமிப்புச் சாதனங்கள் உள்ளிட்ட பலவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றி இருக்கிறார்கள்.

பிடிபட்டு இருக்கும் ஐந்து பேரும் இதர குற்றச்செயல்களிலும் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐவரிடமும் முழு அளவில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்