பாட்னா: பீகார் மாநிலத்தில் பாக்மதி என்ற நதியில் அக்கரைக்குச் சென்று கொண்டிருந்த ஒரு படகு மூழ்கிவிட்டது.
அந்தப் படகில் 30 பள்ளிக் குழந்தைகள் பயணம் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த மாநிலத்தில் உள்ள முசாஃபர்புர் என்ற மாவட்டத்தில் மதுபுர்-பாத்தி காட் என்ற ஊர்களுக்கு இடையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
ஆற்றில் படகு கவிழ்ந்ததும் பள்ளிப் பிள்ளைகள் ஆற்றில் விழுந்துவிட்டார்கள். உடனடியாக செய்தி காட்டுத் தீ போல் பரவியது. மீட்புப் பணியாளர்களின் உதவியுடன் 20 சிறார்கள் மீட்கப்பட்டனர்.
ஆனால், 10 சிறார்களை இன்னமும் காணவில்லை என்றும் அவர்களைத் தேடும் பணி தொடர்வதாகவும் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அவசர உத்தரவைப் பிறப்பித்து அந்தப் 10 பிள்ளைகளையும் உடனடியாக மீட்கும்படி அதிகாரிகளை வலியுறுத்தி இருக்கிறார்.
பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் குடும்பங்களுக்கு அரசாங்கம் அனைத்து உதவிகளையும் செய்யும் என்று அவர் தெரிவித்தார்.

