ஹைதராபாத்: இந்தியாவில் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் பல வீடுகளில் புகுந்து கொள்ளையடித்து வந்த ஒரு கும்பல் பிடிபட்டு இருக்கிறது.
நால்வர் அடங்கிய அந்தக் கும்பலிடம் இருந்து ரூ.2.5 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன.
மூன்று மாநிலங்களிலும் வசிக்கும் பல்வேறு குடும்பத்தினர் தங்கள் காவல்நிலையங்களில் புகார் தெரிவித்ததை அடுத்து அதிகாரிகள் தனித்தனி படைகளை அமைத்து புலன்விசாரணைகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், வாரங்கால் நகர காவல்துறை அதிகாரிகள் நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2.5 கோடி மதிப்புள்ள தங்கம், வைரம், வெள்ளி நகைகள் பறிமுதலாயின.
அந்த நால்வரிடமும் விசாரணை நடத்தியபோது பல்வேறு விவரங்கள் தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த நால்வரும் மாநிலம் விட்டு மாநிலம் சென்று கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடக் கூடியவர்கள்.
நீண்டகாலமாக இதே தொழிலைச் செய்து வருகிறார்கள். 32 வழக்குகள் தொடர்பில் அவர்கள் தேடப்பட்டு வந்தார்கள்.
நகைகளுடன் நான்கு கைப்பேசிகள், ஒரு கார், ரூ.6 லட்சம் மதிப்புள்ள கஞ்சா, போலியான ஆதார் அட்டைகள், பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி உள்ளிட்ட பலவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தொடர்புடைய செய்திகள்
அந்த நால்வரும் உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கைவரிசைகளைக் காட்டி இருக்கிறார்கள் என்றும் தெரியவந்து இருக்கிறது.
அக்பர் குரேஷி, 34, கபில் ஜாதாவோ, 30, முகம்மது ஷெரீப், 56, முகம்மது ஜாத் கான், 25, என்ற அந்த நான்கு பேரும் இப்போது தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

