மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள காளி என்ற பேரூரைச் சேர்ந்த திரு பாலமுருகன், 49, என்பவரின் குடும்பம் வணிகத்தில் ஈடுபட்டு வரும் குடும்பம்.
இருந்தாலும் இவருக்கு சுற்றுச்சூழலில், பசுமையில் நாட்டம். இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ வேண்டும் என்று ஆசை.
ஆகையால் திரு பாலமுருகன் தனது மனைவி திருமதி தரணீஸ்வரியின் பூர்வீகமான சோழம்பேட்டை என்ற கிராமத்தில் அரை ஏக்கர் நிலத்தை வாங்கி அதில் மலைவேம்பு விவசாயம் செய்து வருகிறார்.
“என் நிலம் தாழ்வான பகுதியில் இருக்கிறது. அதனால் தண்ணீர் தேங்கும் பிரச்சினை வரும். இதனால் கானு வெட்டி மேல்பட்ட வரப்பில் மலைவேம்பு வளர்க்கிறேன். தண்ணீர் பிரச்சினையே வராது. பக்கத்து நிலத்தில் இருந்து தண்ணீர் ஊரிவந்து தேங்கி நிற்கும் என்பதால் தாவரம் நீரை உறிஞ்சி வளரும்.
“ஈசா அறநிறுவனம் என்ற ஓர் அமைப்பு மூலிகைச் செடிகளை விற்கிறது. அந்த அமைப்பு இரண்டு மாதம் வயதுள்ள மலைவேம்புக் கன்றுகளைத் தலா ரூ.7 முதல் ரூ.10 வரை விற்கிறார்கள். 200 கன்றுகளை வாங்கி நட்டு இருக்கிறேன்.
“என்னுடைய நிலம் தாழ்வான நிலம் என்பதால் தண்ணீர் தேங்காமல் இருக்க சிறப்பு ஏற்பாடாக கானு வெட்ட வேண்டிய தேவை இருந்தது. இதனால் ரூ.40,000 செலவாகிவிட்டது. இல்லை என்றால் அரை ஏக்கரில் மலைவேம்பு பயிரிட ரூ.10,000 போதும்.
“நாள் ஒன்றுக்கு ஒரே ஒரு மணி நேரம் பாடுபடுகிறேன். கீழே கிடக்கும் தண்ணீரை வாளியில் மொண்டு ஒவ்வொரு செடிக்கும் ஊற்றிவிட வேண்டும். மூன்று மாதம் பாடுபட்டால் போதும். செடி நன்று வேரூன்றியதும் மலைவேம்பு அதுவாக பிழைத்துக்கொள்ளும்.
“பூச்சி மருந்து அடிப்பது போன்ற எதுவுமே தேவையில்லை. ஆடு, மாடுகளிடம் இருந்து மூன்றுமாத காலம் காப்பாற்றிவிட்டால் போதுமானது.
தொடர்புடைய செய்திகள்
“மூன்றாண்டுகளில் மலைவேம்பு பருத்து, பெருத்து மூன்று டன் எடையுள்ள மரமாகிவிடும். மரக்கூழ் தயாரிக்கும் நிறுவனத்தினர் வந்து அப்படியே வெட்டி லாரிகளில் ஏற்றி எடுத்துச் சென்றுவிடுவார்கள்.
“மலைவேம்பு மரத்தை ஒரு டன்னுக்கு ரூ.3,000 கொடுத்து வாங்கிக் செல்கிறார்கள். நான் வைத்துள்ள 200 கன்றுகளில் 100 கன்றுகள் பிழைத்தாலே போதும். மூன்று ஆண்டுகளில் ரூ.10 லட்சம் சம்பாதித்துவிடலாம். 200 கன்றுகளும் நன்கு வளர்ந்தால் அது ரூ.20 லட்சமாகிவிடும்.
“100 கன்று பிழைத்தாலே மாதம் ரூ.25,000 முதல் ரூ.30,000 கிடைத்துவிடும். எந்த செலவும் கிடையாது,” என்று திரு பாலமுருகன் விளக்கிக் கூறினார்.
“மூன்றாண்டுகளில் பணம் தேவையில்லை என்றால் மரங்களைத் தொடர்ந்து வளரவிடலாம். ஐந்தாண்டுகளில் வெட்டினால் பிளைவுட் பலகைக்கு மலைவேம்பு பயன்படும். 10 ஆண்டுகள் வளரவிட்டால் வீட்டு கதவு, மேசை, நாற்காலி போன்ற அறைகலன்களைத் தயாரிக்க மலைவேம்பு மரத்தைப் பயன்படுத்தலாம்,” என்று அவர் மேலும் விளக்கினார்.
“மாற்று விவசாயம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இப்போதைய நவீன பரபரப்பான மாசுபட்ட உலகைவிட்டு விலகி இயற்கை சூழலில் கிராமியப் பகுதிகளில் விவசாயத்தில் ஈடுபட்டு உடல்நலனையும் இயற்கை வளத்தையும் காக்க வேண்டும் என்பது எனது தீராத ஆசை.
“மலைவேம்பு இலை பெண்களிடம் கருவளத்தை அதிகமாக்கும். அதேபோல, முருங்கை மரத்தில் இருந்து வடியக்கூடிய கோந்து ஆண்களிடம் மலட்டுத் தன்மையைப் போக்கும். என்னால் முடிந்த வரை இதை எடுத்துச் சொல்லி பலருக்கும் உதவி வருகிறேன்,” என்று திரு பாலமுருகன் கூறனிார்.
திரு பாலமுருகனின் தந்தையான திரு கலியமூர்த்தி காளியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார்.
திரு பாலமுருகனுக்கு கதிரவன், 7, சஹானாஸ்ரீ, 13, என்ற வயதில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் படித்து வருகிறார்கள்.
“இந்த நிலம் வாங்கியது முதல் சில ஆண்டு காலம் சும்மாவே கிடந்தது. உடலுழைப்பு வேண்டும். நிலத்தைப் பசுமையாக்க வேண்டும். அதேவேளையில், லாபத்தையும் பார்க்க வேண்டும். இந்த மூன்று குறிக்கோள்களையும் மலைவேம்பு விவசாயம் நிறைவேற்றி தருகிறது.
“நான் 10 ஆம் வகுப்பு வரைதான் படித்து இருக்கிறேன். நகர்புற வாழ்க்கையைத் தவிர்க்க இயலாது என்றாலும் கூடுமானவரை பசுமைச் சூழலை அனுபவித்து வாழவேண்டும். கரும்பு, நெல் போன்ற விவசாயத்தில் ஈடுபட தனித் திறமை வேண்டும். அவை பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
“ஆனால், மலைவேம்பு போன்ற மாற்று விவசாயத்திற்கு எதுவும் தேவையில்லை. காலையில் ஒரு மணி நேரம் பாடுபடுகிறேன். அது நல்ல உடற்பயிற்சி ஆகிவிடுகிறது.
“செடிகள் வளர வளர நிலம் முழுவதும் பசுமை சூழ்கிறது. காலம் ஓட ஓட கைக்குக் காசும் வருகிறது. பொதுவில் இந்தத் தொழில் எனக்கு மிகவும் மனநிறைவைத் தருகிறது,” என்று திரு பாலமுருகன் தன்னுடைய நிலத்தில் நின்றபடி கூறினார்.
நான் அவரைச் சந்தித்தபோது அவர் மலைவேம்பு கன்றுகளுக்குக் கீழே ஓடை போன்ற கானுவில் இருந்தத் தண்ணீரை மொண்டு ஊற்றிக் கொண்டு இருந்தார்.
“‘மூன்றாண்டு போகட்டும் வந்து பாருங்கள். மலைவேம்புவின் மகத்துவம் உங்களுக்குத் தெரியும்” என்று கூறிய திரு பாலமுருகனிடம் இருந்து விடைபெற்றபோது, அவசியம் வந்து அந்த அழகை பார்க்க வேண்டும் என்ற ஆவல் என்னிடம் குடிகொண்டது.