இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் தொடங்கிய இனக்கலவரத்தில் 175 பேர் உயிரிழந்தனர்;1,108 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும் 32 பேரைக் காணவில்லை என்று காவல்துறை கூறியுள்ளது.
கலவரத்தில் 4,786 வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டதாகவும் 386 வழிபாட்டுத்தலங்கள் இடிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தலைநகர் இம்பாலில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய உயரதிகாரிகள், மாநிலத்தில் அமைதியை மீட்டெடுக்க காவல்துறையும் அரசாங்கமும் 24 மணி நேரமும் பாடுபடுகிறது என்று பொதுமக்களுக்கு உறுதியளிப்பதாகக் கூறினர்.
கலவரத்தின்போது கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்களில் 1,359 துப்பாக்கிகளும் 15,050 வெடிமருந்துகளும் மீட்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
“இதுவரை 5,712 தீவைப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 254 தேவாலயங்கள், 132 கோயில்கள் என 386 வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்பட்டன. பிஸ்னுபூர் மாவட்டம் இகாய் முதல் சுராசந்த்பூர் மாவட்டம் கங்க்வாய் வரையிலான பகுதிகளில் பாதுகாப்புத் தடைகள் அகற்றப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் பாதுகாப்பு நீடிக்கிறது,” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
கலவரங்களில் உயிரிழந்த 175 பேரில், ஒன்பது பேர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
இதுவரை 76 உடல்கள் உரிமைகோரப்பட்டுள்ளன என்றும் 96 உடல்கள் இன்னும் உரிமை கோரப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இந்தக் கலவரம் தொடர்பாக 9,332 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன; 325 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலை-32, தேசிய நெடுஞ்சாலை-2 ஆகியவற்றில் போக்குவரத்து வழக்கநிலைக்குத் திரும்பியிருப்பதாக அதிகாரிகள் கூறினர்.
மணிப்பூர் மக்கள்தொகையில் 53 விழுக்காட்டினர் மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். நாகா, குக்கி சமூகத்தினரை உள்ளடக்கிய பழங்குடியின மக்கள் 40 விழுக்காட்டினர். இவர்கள் பெரும்பாலும் மலை மாவட்டங்களில் வசிக்கின்றனர்.
இந்நிலையில், மைத்தேயி சமூக மக்களைப் பட்டியல் பழங்குடியினர் பிரிவில் இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த மே 3ஆம் தேதி நடந்த பழங்குடியினர் அமைதிப் பேரணியில் இரு பிரிவினருக்கும் இடைய மோதல் ஏற்பட்டது.
பின்னர் அது வன்முறையாக மாறி மாநிலம் முழுவதும் பரவியது. அதில் மணிப்பூர் மாநிலமே பற்றி எரிந்தது. ஆயிரக்கணக்கானோர் வீடுகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர்

