புதுடெல்லி: வழக்குகளில் விசாரணையை இழுத்தடித்து வேண்டுமென்றே தள்ளிப்போடக் கோரும் போக்கைக் கண்டித்து, அத்தகைய ஒரு வழக்கறிஞருக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு ஒன்றில் உச்ச நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக அவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது.
வழக்கு தொடர்பான தகவல் ஏதும் அறியாத, பயிற்சி பெறும் வழக்கறிஞர் அந்த விசாரணைக்கு அனுப்பப்பட்டார்.
தலைமை நீதிபதி தலைமையிலான அமர்விடம் வழக்கைத் தள்ளிப்போட அவர் கோரிக்கை விடுத்தார். வழக்கு தொடர்பில் நீதிபதிகள் கேட்ட எளிய கேள்விகளுக்குக்கூட அவரால் பதிலளிக்க இயலவில்லை.
இப்படித்தான் எந்தத் தகவலும் அறியாமல் நீதிமன்றத்துக்கு வருவதா என்று கேட்டபோது, தள்ளிப்போடக் கோரும்படி மட்டுமே தான் அனுப்பப்பட்டதாகக் கூறினார் பயிற்சி பெறும் வழக்கறிஞர்.
இதனால் சினமுற்ற தலைமை நீதிபதி, “அரசமைப்புச் சட்டம் எங்களை வழக்கை விசாரிக்கும்படி உத்தரவிடுகிறதே தவிர, தள்ளிப்போடும்படி அன்று,” என்றார்.
பின்னர் அந்த வழக்கை ஏற்று நடத்தும் வழக்கறிஞருக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது.

