ரூ.5.000 கோடி கள்ளப்பண விவகாரம்; ரூ.200 கோடி செலவில் திருமணம்: 17 பாலிவுட் நட்சத்திரங்கள் மீது கண்

2 mins read
5c822e62-ee63-446e-96bd-9bb38332e228
துபாயில் கடந்த பிப்ரவரியில் ரூ.200 கோடி செலவில் நடந்த மிக ஆடம்பரமான சவ்ரப் சந்திரகரின் திருமணத்தில் எடுக்கப்பட்ட ஒரு படம் அண்மையில் தலைகாட்டியது. - படம்: இந்திய ஊடகம்

மும்பை: மகாதேவ் சூதாட்ட செயலியின் தலைவரான சௌரப் சந்திரகர், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துபாயில் திருமணம் செய்து கொண்டார்.

சௌரப் தனது திருமணத்திற்காக 200 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக அமலாக்க இயக்குநரகம் கூறுகிறது. இந்தத் தொகையின் பெரும்பகுதி துபாய் திருமணத்தில் கலந்துகொண்டு நிகழ்ச்சி நடத்திய பாலிவுட் பிரபலங்களுக்குச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

அவர்கள் இப்போது விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்பது தெரியவந்துள்ளது.

டைகர் ஷெராஃப், சன்னி லியோன், பாடகி நேஹா கக்கர் ஆகியோரே முதன்மையான பங்கேற்பாளர்களாகத் தெரியவந்துள்ளனர்.

துபாயில் இருந்து இணையச் சூதாட்ட செயலியை இயக்கும் சௌரப் சந்திரகர், அவரின் கூட்டாளி ரவி உப்பல் ஆகியோருக்கு எதிரான 5,000 கோடி ரூபாய் பணமோசடி குற்றச்சாட்டுகள் பற்றி அமலாக்க இயக்குனரகம் விசாரித்து வருகிறது.

பணமோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் சௌரப் சந்திரகர், ரவி உப்பல் இருவரும் சத்தீஸ்கரை சேர்ந்தவர்கள். சந்திரகர் துபாயில் மற்றொரு விருந்தையும் நடத்தியிருக்கிறார். ஏழு நட்சத்திர சொகுசு விடுதியில் நடந்த அந்த விருந்தில் கலந்துகொள்ள சில பாலிவுட் நட்சத்திரங்கள் ரூ.40 கோடி பணம் வாங்கியுள்ளனர்.

பிப்ரவரியில் நடந்த திருமணத்தில் நாக்பூரிலிருந்து துபாய்க்குக் குடும்ப உறுப்பினர்களை அழைத்துச் செல்ல தனியார் விமானங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டன.

பாலிவுட் பிரபலங்கள், நடனக் கலைஞர்கள், அலங்கார கலைஞர்கள் என அனைவரும் மும்பையில் இருந்து துபாய்க்கு விமானம் மூலம் அழைத்து செல்லப்பட்டனர்.

கடந்த ஆண்டு டிசம்பரில் மகாதேவ் இணைய சூதாட்டம் பற்றிய விசாரணை தொடங்கியது. பாலிவுட் தொடர்பு பற்றி இப்போதுதான் தெரியவந்துள்ளது.

மகாதேவ் இணையச் சூதாட்டத்தில் கடந்த ஆண்டில் ஒரு மில்லியன் பேர் பந்தயம் கட்டியுள்ளனர். இந்தச் செயலி சுமார் 30 மையங்களில் இருந்து இயக்கப்படுகிறது.

போபால், மும்பை மற்றும் கோல்கத்தாவில் வழக்கு தொடர்பாக 417 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் வெள்ளிக்கிழமை, பறிமுதல் செய்யப்பட்டன.

இதன் அடிப்படையில் 17 பாலிவுட் பிரபலங்களை விசாரணைக்கு அழைக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.

குறிப்புச் சொற்கள்