கோழிக்கோடு: கேரளாவில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இந்நிலையில் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களும் செப்டம்பர் 24ஆம் தேதி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையிலும் 1080 பேரை நிபா தொற்று பாதித்துள்ளது. அவர்களில் 327 பேர் சுகாதாரத்துறையைச் சேர்ந்தவர்கள். நிபா தொற்று மலப்புரம், கண்ணூர், திரிசூர், வயநாட்டிலும் பரவியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தலைமை இயக்குநர் ராஜீவ் பாஹல் செய்தியாளர் சந்திப்பில், “நிபா கிருமி பாதிக்கப்பட்டவர்களிடையே இறப்பு விகிதம் மிகவும் அதிகமாக இருக்கிறது. கொரோனா தொற்று பாதிப்பில் இறப்பு விகிதம் 2 முதல் 3 விழுக்காடு என்றால் நிபா வைரஸ் பாதிப்பில் இறப்பு விகிதம் 40 முதல் 70 விழுக்காடு ஆக உள்ளது.
“மேலும், கடந்த 2018ஆம் ஆண்டில் நிபா தொற்று தாக்கியபோது அது வெளவால்கள் மூலமாகவே பரவியது என்பதை நாங்கள் உறுதி செய்தோம். ஆனால் இப்போது இந்தத் தொற்றுக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. பொதுவாகவே மழைக்காலத்தில் இந்த நோய் அதிகம் பரவுகிறது.
“நிபா தொற்று அதிகரித்து வருவதால், ஆஸ்திரேலியாவில் இருந்து ஆண்டிபாடி மருந்துகள் தருவிக்கப்படும்,” என்று ராஜீவ் பாஹல் கூறினார்.

