பெங்களூர்: இந்தியாவின் பெங்களூர் நகரின் கெம்பே கௌடா அனைத்துலக விமான நிலையத்தின் புதிய முனையம் அண்மையில் திறக்கப்பட்டது.
அதன் கட்டமைப்பைப் பிரபல நடிகரும் இயக்குநருமான ஆர்.மாதவன் இன்ஸ்டகிராம் சமூக ஊடகத்தில் பாராட்டியுள்ளார்.
சொகுசுத் தோட்டத்தைக் கருப்பொருளாகக் கொண்ட கெம்பே கௌடா விமான நிலையத்தின் புதிய அனைத்துலக முனையம் வித்தியாசமாக அமைந்துள்ளதாகவும் அது ஆகச் சிறந்த உள்கட்டமைப்பைக் கொண்டிருப்பதாகவும் ‘மேடி’ எனச் செல்லமாக அழைக்கப்படும் மாதவன் புகழ்ந்தார்.
“இந்தியாவின் உள்கட்டமைப்பு உருவெடுக்கும் விதம் மிகச் சிறப்பாக உள்ளது. நான் இப்போது கெம்பே கௌடா அனைத்துலக விமான நிலையத்தில் இருக்கிறேன். இது வித்தியாசமான இடமாகத் தெரிகிறது. இது விமான நிலையம் என்று யாரும் நம்பமாட்டார்கள்,” என்று இன்ஸ்டகிராமில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியில் மாதவன் கூறியிருந்தார்.
மாதவனின் இன்ஸ்டகிராம் பதிவுக்குக் குறைந்தது 492,252 ‘லைக்’ உணர்வுப் பதிவுகள் கிடைத்தன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இந்தக் காணொளிக்கு உணர்வுப் பதிவு அனுப்பினார்.
“இந்தியாவின் வளர்ச்சிக்கான அடுத்த தலைமுறை உள்கட்டடைப்பு,” என்று திரு மோடி பதில் கருத்து தெரிவித்தார்.


