புதுடெல்லி: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் திங்கட்கிழமை தொடங்குகிறது. இவ்வேளையில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் துணை அதிபர் ஜகதீப் தங்கர் மூவண்ண தேசியக் கொடியை நேற்று ஏற்றி வைத்தார்.
கடந்த மே மாதம் 28ஆம் தேதி திறக்கப்பட்ட புதிய கட்டடத்தில் தேசியக் கொடி ஏற்றப்படவில்லை என்பதால் நேற்று கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
“இது, ஒரு வரலாற்றுச் சிறப்புவாய்ந்த நிகழ்வு. பாரதத்தின் ஆற்றலையும் பங்கையும் உலகம் அங்கீகரித்துள்ளது,” என்று தமது உரையில் திரு ஜகதீப் தங்கர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி, முரளீதரன், பியூஷ் கோயல், அர்ஜூன் ராம்மேக்வால், காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பிரமோத் திவாரி உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கட்சியின் இரண்டு நாள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஐதராபாத் சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல்நாள் நிகழ்வுகள் வழக்கம்போல பழைய கட்டடத்திலேயே நடைபெற உள்ளன. அடுத்த நாள் முதல் 22ஆம் தேதி வரை புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் சிறப்புக்கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் அறிவிக்கப்படாததற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இதையடுத்து நாடாளுமன்றச் செய்தி இதழில் இது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அரசியல் நிர்ணய சபை தொடங்கப்பட்டது முதல் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம் வரை இந்தக் கூட்டத் தொடரின் முதல் நாளில் விவாதிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மசோதாவை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.
இந்த மசோதா மக்களவையில் விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர, வழக்கறிஞர்கள் (திருத்த) மசோதா, அஞ்சல் அலுவல் மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் மக்களவை நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றுள்ளன.
மேலும், நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவும் இந்தக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
இதற்கிடையே சிறப்புக் கூட்டத்தொடரில் பாஜக உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு அக்கட்சியின் கொறடா உத்தரவிட்டு உள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக முன்னாள் அதிபர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
இதனால், அதுபற்றி இந்த சிறப்பு கூட்டத்தொடரில் விவாதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு நாடாளுமன்ற ஊழியர்கள் புதிய சீருடை அணிந்து செல்லவிருக்கின்றனர். இவற்றை, ‘நிப்ட்’ எனப்படும் பாட்னா தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப மையம் தயாரித்துள்ளது.
இதேபோல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் காவலர்களின் உடைகளும் மாற்றப்படுகின்றன. அவர்கள் மணிப்பூரி தலைப்பாகை அணிந்திருப்பார்கள். நாடாளுமன்ற வளாகப் பாதுகாவலர்களின் சீருடையும் மாற்றப்படுகிறது. சஃபாரி உடைக்குப் பதிலாக அவர்களுக்கு ராணுவத்தினர் அணியும் உருமறைப்பு உடைகள் வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

