கடனைக் கட்டத் தவறுவோர்க்கு ‘சாக்லெட்’ அனுப்பும் வங்கி!

1 mins read
08e21a27-e9e4-4191-9c0a-39a75c5ada5b
இந்த சோதனைத் திட்டம் வெற்றிபெற்றால், பின்னர் முறையாக அறிவிக்கப்படும் என்று ‘எஸ்பிஐ’ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: வாங்கிய கடனுக்கான மாதத் தவணையைக் கட்டத் தவறுவோர்க்கு சாக்லெட் பொட்டலம் ஒன்றை அனுப்புகிறது இந்தியாவின் ஆகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா.

மாதாந்திரத் தவணையைக் கட்டத் தவறத் திட்டமிட்டுள்ளோர், அதுகுறித்து தொலைபேசியில் அழைத்து நினைவுகூர முயன்றால், அவர் அந்த அழைப்பை ஏற்பதில்லை என்பதை வங்கி கண்டறிந்தது.

இதனால், முன்னறிவிப்பின்றி திடுதிப்பென ஒரு சாக்லெட் பொட்டலத்துடன் அவரது வீட்டிற்கே செல்லும் முயற்சியைத் தொடங்கியுள்ளது அவ்வங்கி.

“இரு நிதித் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து இந்தத் திட்டத்தில் இறங்கியுள்ளோம். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படுகிறது. கடனைக் கட்டத் தவறலாம் என எதிர்பார்க்கப்படும் வாடிக்கையாளர்களின் வீட்டிற்கு, சாக்லெட் பொட்டலத்துடன் சென்று அதிகாரிகள் மாதக் கடன் தவணை குறித்து நினைவுபடுத்துவர்,” என்று அவ்வங்கியின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான அஸ்வினி குமார் திவாரி கூறியதாக ‘பிடிஐ’ செய்தி தெரிவிக்கிறது.

கடன் வசூலிப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இம்முயற்சிக்கு நல்ல பலன் கிட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இரு வாரங்களுக்குமுன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் இப்போது சோதனை முயற்சியிலேயே இருக்கிறது என்றும் வெற்றிகரமாக இருப்பின், முறையாக அறிவிக்கப்படும் என்றும் திரு திவாரி கூறினார்.

இருப்பினும், இந்தத் திட்டம் தனிநபர் கடனுக்கு மட்டும்தான் பொருந்தும் என்றும் தொழில், வணிக நிறுவனங்கள் பெற்ற கடனுக்கு இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்