நேரு முதல் இந்திரா காந்தி வரை

பழைய நாடாளுமன்றத்தில் முன்னோடித் தலைவர்களை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி

நேரு முதல் இந்திரா காந்தி வரை

2 mins read
24befb55-444d-403c-a75f-8adfa5150e46
ஐந்து நாள் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் பேசினார். - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: விடுதலைக்குப் பிறகு நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாடாளுமன்றமாக செயல்பட்டு வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க நாடாளுமன்றக் கட்டடத்திற்கு நாம் விடை கொடுக்கவிருக்கிறோம் என்று நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பொன்மயமான பயணத்தில் இந்த கட்டடம் செயல்பட்டதை நினைவு கூர்வோம். ஒவ்வொரு இந்தியர்களின் வியர்வையாலும் பணத்தாலும் இந்தக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

தொழில் நுட்பம், அறிவியல், புது யுகத்துடன் இணைந்த புதிய பாதை சந்திரயான் உடன் தொடங்கியிருக்கிறது.

ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை இந்த அவை கட்டிக்காத்துள்ளது. இந்த அவையின் தாக்கத்தால் நமது வலிமையை உலகிற்கு நிரூபித்துள்ளோம்.

ராஜேந்திர பிரசாத் முதல் ராம்நாத் கோவிந்த் வரை பலர் அவைக்கு வழிகாட்டியுள்ளனர்.

நேரு முதல் மன்மோகன் சிங் வரை நாட்டின் வளர்ச்சியை நிலைநாட்ட உழைத்துள்ளனர்.

சாதாரண மக்களின் குரலை இந்த அவையில் எதிரொலிக்க செய்துள்ளனர்.

கொரோனா தொற்றுக் காலத்திலும் அவை நடவடிக்கைகளை முடக்க நாம் அனுமதிக்கவில்லை.

நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகிய மூன்று பிரதமர்கள் பதவியில் இருந்தபோது உயிரிழந்தது சோகமான தருணம்.

நம்மை வழிகாட்டியவர்களுக்கு வணக்கம் செலுத்துவதற்கான நேரமிது.

நாடாளுமன்றத்தில் நேரு ஆற்றிய ‘டிரைஸ்ட் வித் டிஸ்டினி’ உரையை பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார்.

இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பை செய்தவர் அம்பேத்கர். நேரு அமைச்சரவையில் சிறப்பாக பணியாற்றியவர் அம்பேத்கர். ஆங்கிலேயர்களுக்கு எதிராக பகத்சிங் குண்டு வீசிய சம்பவம் இந்த அவையில் எதிரொலிக்கிறது. பசுமை திட்டத்திற்கான புதிய திட்டத்தை வகுத்தவர் லால் பகதூர் சாஸ்திரி வங்கதேச போர் வெற்றிக்கு வித்திட்ட இந்திரா காந்தி, அந்த பிரகடனத்தை இந்த அவையில் வாசித்தார்.

நரசிம்மராவ் தலைமையிலான ஆட்சியில் ஒரே நாடு ஒரே வரி (ஜிஎஸ்டி) என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்த அவை, வேற்றுமையில் ஒற்றுமையை காண்பிக்கும் விதமாக பல்வேறு சிறிய கட்சிகளின் உறுப்பினர்கள் இங்குள்ளனர்.

முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீட்டை ஏற்றுக்கொண்டது இந்த அவை.

வாஜ்பாய் ஆட்சி காலத்தில் மூன்று மாநிலங்கள் பிரிக்கப்பட்டதை அனைவரும் கொண்டாடினர்.

400 உறுப்பினர்களுடன் ஆட்சியில் இருந்த கட்சி இன்று எதிர்க்கட்சி வரிசையில் உள்ளது. கொரோனாவின்போது சம்பளத்தில் 30 விழுக்காட்டை உறுப்பினர்கள் நிதியாக அளித்தனர்.

வரலாறையும், வருங்காலத்தையும் ஒன்றிணைத்து பார்க்க வேண்டிய தருணத்தில் உள்ளோம் அருமையான நினைவுகளோடு இந்த அவையில் உங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும் உங்கள் ஒத்துழைப்போடு புதிய நாடாளுமன்றத்திற்கு செல்லும்போது நாம் சிறப்பாக பணியாற்றுவோம் என்று நம்புகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

1927ல் ஜனவரி மாதம் 18ஆம் தேதி பழைய நாடாளுமன்றக் கட்டடத்தை வைசிராயாக இருந்த இர்வின்பிரபு திறந்து வைத்தார். இன்னும் நான்கு ஆண்டுகளில் இந்த கட்டடம் நூற்றாண்டு விழாவை காணவிருக்கிறது. கடந்த 97 ஆண்டு கால வரலாற்றில் இந்தப் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் எத்தனையோ வரலாற்று சிறப்பு மிக்க கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பழைய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு நேற்று விடை கொடுக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்