புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்த நாளான ஞாயிற்றுக்கிழமை டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்து மக்களுடன் உரையாடினார்.
டெல்லி ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் லைன் வழித்தடத்தில் துவாரகா செக்டர் 21 ரயில் நிலையத்தில் இருந்து யஷோ பூமி துவாரகா செக்டர் 25 ரயில் நிலையம் வரை 2 கி.மீ. தொலைவுக்கு வழித்தடம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இதையொட்டி துவாரகா செக்டர் 21 ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் நீட்டிக்கப்பட்ட வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பின்னர் அங்கிருந்து யஷோ பூமி துவாரகா செக்டர் 25 வரை அவர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்.
அப்போது மெட்ரோ ரயில் பயணிகளை அவர் நேருக்கு நேர் சந்தித்து உரையாடினார். குழந்தைகளிடம் கொஞ்சி மகிழ்ந்தார். பிரதமர் மோடியின் 73வது பிறந்த நாளை ஒட்டி பயணிகளும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
டெல்லி எர்போர்ட் எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் 90 கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த வழித்தடத்தில் கடந்த மார்ச் மாதம் மெட்ரோ ரயிலின் வேகம் 100 கி.மீ. ஆகவும் கடந்த ஜூனில் 110 கி.மீ. ஆகவும் உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து டெல்லி எர்போர்ட் எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் மெட்ரோ ரயில்களின் வேகம் நேற்று 120 கி.மீ. ஆக அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில் மெட்ரோ ரயில் விழாவில் பங்கேற்க அழைக்கப்படாததால் டெல்லியின் ஆளும் ஆம் ஆத்மி கட்சி அதிருப்தி அடைந்துள்ளது.

