இரண்டு நாள் கண்காணிப்பில் நிபா தொற்று இல்லை: கேரள அமைச்சர்

இரண்டு நாள் கண்காணிப்பில் நிபா தொற்று இல்லை: கேரள அமைச்சர்

2 mins read
529e0e9a-a5d5-40a2-bb7b-c1b49bde5ed4
நிபா தொற்றால் பாதிக்கப்பட்ட சிறுவன் தேறி வருவதாக அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார். - படம்: இந்திய ஊடகம்

திருவனந்தபுரம்: கேரளாவின் கோழிக்கோட்டில் இருவர் நிபா தொற்றுக்கு பலியான நிலையில் கடந்த இரண்டு நாள்களாக கண்காணிக்கப்பட்டதில் தொற்று பரவுவதற்கான அறிகுறி இல்லை என்று அம்மாநில சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நிபா கிருமித் தொற்று பாதித்து இறந்தவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் என தொடர்பில் இருந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

தில் 24 வயது மதிக்கத்தக்க சுகாதார பணியாளர், 39 வயது மதிக்கத்தக்க நபர் என மேலும் இருவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால் கேரளாவில் நிபா கிருமித் தொற்று பாதிப்பு 6ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தொற்று பாதித்த கோழிக்கோடு மாவட்டத்தில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.

பொது மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது.

தொற்றுப் பாதித்த பகுதிகளாக கண்டறியப்பட்ட ஆயன்சேரி, மருதோன்கரை, திருவள்ளூர், குட்டியாடி, கவிழும்பாறை, வில்லியப்பள்ளி, காயக்கொடி ஆகிய பஞ்சாயத்துகளில் 48 வார்டுகள், கோழிக்கோடு மாநகராட்சியில் ஏழு வார்டுகள், பெரோக் நகராட்சியில் 38 வார்டுகள், சங்கரோத் பஞ்சாயத்தில் மூன்று வார்டுகள், புறமேரி மற்றும் தண்ணீர் பந்தல் பகுதியில் தலா ஒரு வார்டு என 100க்கும் மேற்படட்ட வார்டுகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டன.

நிபா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களுக்கு இவ்வாரமும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

கோழிக்கோடு மாவட்டத்தில் தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 15ஆம் தேதி 1,192 ஆக இருந்தது. அது தற்போது 1,233ஆக அதிகரித்துள்ளது. நிபா வைரஸ் தொற்றுடன் காணப்பட்ட 23 பேர் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 4 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக கவலைக்கிடமாக இருந்து வந்த 9 வயது சிறுவனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், கேரளாவில் கடந்த இரண்டு நாள்களாக புதிதாக நிபா பாதிப்பு எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.

கேரளாவில் இரண்டாவது நாளாக நிபா தொற்று புதிதாக யாருக்கும் உறுதி செய்யப்படாததால் மக்கள் பெருமூச்சுவிட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்