சேலையில் உலகைச் சுற்றும் அழகிய பெண்

இந்தியாவின் புனே நகரைச் சேர்ந்த 28 வயதான ரமாபாய் லத்பட் என்ற பயிற்சி பெற்ற விமானி, ஓராண்டில் 80,000 கி.மீ மோட்டார் பைக்கில் பயணம் செய்து 40 நாடுகளை சுற்றி வருகிறார். ஒன்பது கெஜ சேலையை அணிந்துகொண்டு மோட்டார் சைக்கிளில் ஆறு கண்டங்களில் அவர் தனிப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் தனது ஹோண்டா 350 சிசி பைக்கில் ரமாபாய் லத்பட்டின் நீண்ட பயணம் தொடங்கியது.

ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 5 வரை துபாயில் தனது பயணத்தின் இடைவெளியில் தி நேஷனலுக்கு அவர் பேட்டியளித்தார்.

“ஒரு பெண் அழகாகவும் அச்சமின்றியும் இருக்க முடியும் என்பதைக் காட்ட விரும்புகிறேன்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்கிழமை இந்தியாவுக்குப் பறந்த அவர், லண்டனில் இருந்து தனது பயணத்தை மீண்டும் தொடங்கினார்.

“மோட்டார் சைக்கிள் ஓட்டுவது எப்போதுமே சிறுவர்கள் அல்லது இளையர்களுக்கானது என எனக்குச் சொல்லப்பட்டது,” என்று கூறிய அவர், அதனை உடைத்து, அச்சமற்ற பெண் ஒரு மோட்டார் சைக்கிளில் உலகம் முழுவதும் செல்லும்போது ஒன்பது கெஜ சேலையைக்கூட அழகாக உடுத்த முடியும் என்பதைக் காட்ட விரும்பினேன் என்றார்.

திருமதி லத்பட், தனது சொந்த மாநிலமான இந்தியாவின் மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெண்களின் பாரம்பரிய உடையான நவ்வரி சேலையை அணிந்துள்ளார்.

இது, மற்ற பாரம்பரிய புடவைகளிலிருந்து வேறுபட்டது.

மார்ச் 8ஆம் தேதியன்று அனைத்துலக மகளிர் தினத்தன்று மும்பையின் கேட்வே ஆஃப் இந்தியாவிலிருந்து தனது தனிப் பயணத்தை பயிற்சி பெற்ற விமானியும் தொழில்முனைவருமான திருமதி லத்பட் தொடங்கினார். இந்தியா, நேப்பாளம், பூடான், தாய்லாந்து மற்றும் மலேசியா முழுவதும் 13,000 கிலோமீட்டர் பயணம் செய்து சிங்கப்பூர் சென்றடைந்தார்.

உள்நாட்டுப் போர் காரணமாக மியன்மார் வழியாகச் செல்ல முடியாததால் அவரது மோட்டார் சைக்கிள் விமானம் மூலம் பேங்காக்கிற்குக் கொண்டு செல்லப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் அவரது துணிச்சலான சவாரி, பரந்த மற்றும் சவாலான ஆஸ்திரேலியா வட்டாரங்களை கடந்து செல்ல வைத்தது.

பெர்த்தில் இருந்து சிட்னி வரை 1,600 கிலோ மீட்டர் தூரம் சென்றார். அப்போது, ஒரு கட்டத்தில் மனிதத்தொடர்பு மற்றும் கைப்பேசி இணைப்பு இல்லாத சவால்களை எதிர்கொண்டார்.

ஆனால் அவர் அசரவில்லை. காடுகளில் தனியாக முகாமிட்டு அவர் தங்கினார்.

பின்னர் தனது பைக்கை லண்டனுக்கு அனுப்பி, ஆகஸ்ட் 14ஆம் தேதி அவர் துபாய்க்குப் பறந்தார்.

செப்டம்பர் 5ஆம் தேதியன்று இந்தியாவுக்கு விமானத்தில் செல்வதற்காக அங்கு இரண்டு வாரங்களைக் கழித்தார்.

இந்தியாவிலிருந்து லண்டனுக்குப் பறந்து ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு முழுவதையும் அவர் கடந்து செல்வார். ஐரோப்பாவுக்குப் பிறகு போர்ச்சுகலில் இருந்து மொரோக்கோ, துனிசியா, ஜோர்டான், சவூதி அரேபியா, ஓமானில் உள்ள மஸ்கட் வரை பயணம் செய்து அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் ஐக்கிய அரபு சிற்றரசுகளை அவர் சென்றடைய திட்டமிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி மும்பையில் உள்ள கேட்வே ஆஃப் இந்தியாவுக்குச் செல்வதற்கு முன் அவர் கடல் வழியாக குஜராத்தில் உள்ள ஜாம்நகருக்குச் செல்கிறார்.

இதற்கு முன் டெல்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது அவரது பயணத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.

“இந்தியாவில் பெண்கள் குறிப்பிடத்தக்க மைல்கற்களை எட்டுகின்றனர் என்று கூறிய திரு மோடியின் சுதந்திர தின உரையால் நான் ஈர்க்கப்பட்டேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

இவர், தனது பள்ளிக்கூட படிப்பை முடித்ததும் தனது பெற்றோர்களின் ஆதரவுடன் துணி மற்றும் ஆடம்பர நகைக்கடையை தொடங்கினார். எனினும் விமானியாக வேண்டும் என்ற கனவை 24ஆம் வயதில் பூர்த்தி செய்தார். பின்னர், பாரம்பரிய முறைப்படி சேலை அணிந்து உலகை வலம் வர வேண்டும் என ஆர்வம் கொண்டார். இந்த விருப்பத்தை தனது பெற்றோரிடம் அவர் தெரிவித்தார்.

“அதிர்ஷ்டவசமாக, எனது பெற்றோரும் தன்னை ஆதரித்தனர்,” என்று அவர் கூறினார்.

ஒரு பெண்ணாக தனியாக மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தபோது தனக்கு ஏற்பட்ட சவால்களை அவர் விவரித்தார்.

தங்குவதற்கு அல்லது கூடாரம் போடுவதற்கு ஒரு இடத்தை தேர்வு செய்யும் போது தனது உள்ளுணர்வை பின்பற்றுவதாக அவர் கூறினார்.

“ஒரு பெண்ணுக்கு வலுவான உள்ளுணர்வு இருப்பதாக நினைக்கிறேன். இது, இதுவரை எனக்கு உதவியிருக்கிறது, நான் எங்கு சென்றாலும் மக்கள் நட்பாகவும் அன்புடனும் வரவேற்பதை காண்கிறேன்,” என்று அவர் கூறினார்.

திருமதி லத்பட் ஒரு நாளில் 16 மணிநேரம் பயணம் செய்கிறார், மேலும் அவர், தனது பயணத்தைத் தொடர்வதற்கு முன்பு ஓரிரு நாள்கள் ஓய்வெடுக்கிறார்.

“ஒரு விமானியாக, வரைபடத்தை புரிந்துகொள்ளவும் சாலைகளில் செல்லவும், வானிலை மாற்றங்களை தீர்மானிக்கவும் உதவுகின்றன.”

அவர், ஆடைகளுடன் சில பாத்திரங்களையும் கூடாரத்தையும் எடுத்துச் செல்கிறார்.

“என்னிடம் மோட்டார் சைக்கிளைப் பராமரிப்பதற்கான ‘டூல் கிட்’ உள்ளது. மோட்டார் சைக்கிள் நல்ல நிலையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த இடையிடையே பழுதுபார்ப்பு நிலையங்களில் சோதித்துக் கொள்கிறேன்,” என்றார்.

“இந்தப் பயணத்திற்காக எனது நகைகளையும் எனது காரையும் விற்றேன். முழு பயணத்திற்கும் ரூபாய் 3 கோடி செலவாகும். எனவே, நான் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் ஒரு ரூபாய் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்திய ஆன்மீகத் தலைவரும் ஈஷா அறக்கட்டளையின் நிறுவனருமான சத்குரு மற்றும் அவரது தன்னார்வலர்கள் எனது பயணம் முழுவதும் வழிகாட்டி ஆதரவளிக்கின்றனர்,” என்று திருமதி ரமாபாய் லத்பட் கூறியுள்ளார்.

தகவல்:யுஏஇ

பெண்கள் முக்கிய மைல்கற்களைத் தாண்டி வருகின்றனர் என்ற மோடியின் சுதந்திர தினப் பேச்சால் ஈர்க்கப்பட்டேன் என்று ரமாபாய் லத்பட் கூறியுள்ளார். படம்: இந்திய ஊடகம்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!