‘2024 தேர்தலைக் கவனத்தில் கொண்டு மகளிர் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல்’

‘2024 தேர்தலைக் கவனத்தில் கொண்டு மகளிர் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல்’

2 mins read
b2b618dd-7923-4e77-b610-3e0d3b1dc445
ஓபிசி பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்காமல் போனால் 2024ல் பாஜக உத்தரப் பிரதேசத்திலும் தோல்வியடையும் என்கிறார் மாநிலங்களவை உறுப்பினரான கபில் சிபல். -

புதுடெல்லி: மகளிர் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்றக் கோரி காங்கிரஸ் கட்சி நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துவந்தது.

இந்த நிலையில் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கையை வரவேற்கிறோம் என்று காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

முன்னதாக திங்கட்கிழமை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக்கோரி காங்கிரஸ் கட்சி நீண்ட காலமாகக் கோரி வருகிறது.

“மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து வெளியாகும் கருத்தினை நாங்கள் வரவேற்கிறோம். இதுகுறித்து நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்துக்கு முன்பாக நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் விவாதித்து இந்த திரைமறைவு அரசியலுக்குப் பதிலாக ஒருமித்த கருத்தை எட்டியிருக்கலாம்,” என்று தெரிவித்தார்.

இதனிடையே, மாநிலங்களவை உறுப்பினரான கபில் சிபல் செவ்வாய்க்கிழமை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “ஒருவேளை மோடியால் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டால், அநேகமாக அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்கும் நிலையில் கடந்த பத்து ஆண்டுகளாக காத்திருந்தது ஏன் என்று ஆச்சரியப்படுகிறீர்களா?

“ஒருவேளை 2024 மக்களவைத் தேர்தல் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், ஓபிசி எனப்படும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கான இடஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்காமல் போனால் 2024ல் பாஜக உத்தரப் பிரதேசத்திலும் தோல்வியடையும். இதுகுறித்து யோசித்துப் பாருங்கள்,” என்று கூறினார்.