மகாராஷ்டிரா: தகுதிநீக்க விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

மகாராஷ்டிரா: தகுதிநீக்க விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

3 mins read
b5416cf5-76d9-4415-b46b-153f403fc71e
மகாராஷ்டிர சபாநாயகர் ராகுல் நார்வேகர், உச்ச நீதிமன்றம் அனுப்பிய ஆணையின் நகல் இன்னும் தன் கைகளில் வந்துசேரவில்லை என்று கூறியுள்ளார்.  - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 56 சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான தகுதிநீக்க விவகாரத்தில் முடிவெடுக்க காலக்கெடுவை நிர்ணயித்து ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகாராஷ்டிர சபாநாயகர் ராகுல் நார்வேகருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்க விவகாரத்தில் சரியான நேரத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு சிவசேனா கட்சி, இரண்டாக உடைந்தது. ஏக்நாத் ஷிண்டே தலைமையில் நாற்பதுக்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியில் இருந்து விலகுவதற்கான நெருக்கடி ஏற்பட்டு விலகினார்.

உத்தவ் தாக்கரே விலகிய பின், அங்கு பாஜக – சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு) கூட்டணி ஆட்சி அமைந்தது. ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் செயல்பட்டு வருகின்றனர்.

ஒருங்கிணைந்த சிவசேனாவின் கொறடாவாக இருந்த சட்டமன்ற உறுப்பினர் சுனில் பிரபு, ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 பேரை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் ராகுல் நார்வேகரிடம் கடிதம் வழங்கியிருந்தார். அதேபோல் ஷிண்டே தரப்பு உத்தவ் தாக்கரே அணியின் சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்ய கடிதம் வழங்கியது. ஆனால், சபாநாயகர் இதுகுறித்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து உத்தவ் தாக்கரே தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ஷிண்டே உள்ளிட்டவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தநிலையில் இரண்டு தரப்பு தகுதி நீக்க விவகாரத்தில் சபாநாயகரின் முடிவினை விரைவு படுத்த உத்தரவிடக்கோரி சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) சட்டமன்ற உறுப்பினர் சினில் பிரபு தாக்கல் செய்த மனு திங்கட்கிழமை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட், நீதிபதிகள் ஜெபி பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன்பு திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சபாநாயகரிடம் மே 11ஆம் தேதி தகுதிநீக்க வழக்கில் நியாயமான காலத்துக்குள் முடிவெடுக்க கூறியதாகவும், அதன் பின்னர் ஜூலையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதைத் தவிர வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நீதிமன்றம் கூறியது.

இதனிடையே, (உத்தவ் அணி) நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவுத் கூறுகையில்,”நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், தகுதி நீக்க மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் சபாநாயகர் காலத்தைக் கடத்தி வருகிறார். இதன் மூலம் அவர் மாநிலத்தில் அரசியலமைப்புக்கு எதிரான அரசுக்கு ஆதரவளித்து வருகிறார் என்று குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மகாராஷ்டிர சபாநாயகர் ராகுல் நார்வேகர், உச்ச நீதிமன்றம் அனுப்பிய ஆணையின் நகல் இன்னும் தன் கைகளில் வந்துசேரவில்லை என்று கூறியுள்ளார். நீதிமன்ற உத்தரவு கிடைத்த பின், சரியான நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்