மகளிர் இடஒதுக்கீடு மசோதா: உடனே அமலாக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்து

மகளிர் இடஒதுக்கீடு மசோதா: உடனே அமலாக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்து

2 mins read
d791195b-8496-4fb6-94d8-84e21d020b2c
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை காங்கிரஸ் கட்சி ஆதரிப்பதாக அந்தக் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி புதன்கிழமை மக்களவையில் உறுதிபட தெரிவித்தார்.  - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் முதல் மசோதாவாக, மகளிர் இடஒதுக்கீடு மசோதா செவ்வாய்க்கிழமை தாக்கலானது.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை காங்கிரஸ் கட்சி ஆதரிப்பதாக அந்தக் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி புதன்கிழமை மக்களவையில் உறுதிபட தெரிவித்தார்.

இருந்தாலும் நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மசோதா மீதான விவாதத்தில் பேசிய சோனியா காந்தி, காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஆட்சிக்காலத்தில் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதாகவும் அவ்வாறு நிறைவேற்றப்பட்டு 13 ஆண்டுகளாக இந்திய பெண்கள் காத்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

ஆகையால் மசோதா உடனே நிறைவேற்றப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அதேபோல, பல எதிர்க்கட்சிகளும் அந்த மசோதாவை 2024 தேர்தலிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தின.

இந்த மசோதா மூலமாக மகளிருக்கு நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் 33% இட ஒதுக்கீடு உறுதி செய்யப்படும்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மசோதாவை ஆதரித்து செவ்வாய்க்கிழமை பேசினார். இந்திய தாய்மார்கள், சகோதரிகளின் கையில் அதிகாரத்தை அளிக்க வேண்டியது நமது கடமை என்று அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற மக்களவையில் இப்போது தாக்கலாகி இருக்கும் மசோதா, மகளிர் இடஒதுக்கீட்டுக்காக அரசமைப்புச் சட்டத்தில் 128வது முறையாக திருத்தம் செய்யப்பட்ட ஒன்றாகும்.

இந்நிலையில், மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்த பிறகுதான் மகளிருக்கான இடஒதுக்கீடு நடப்புக்கு வரும் என்று தெரிகிறது.

மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்யும் பணி 2026ஆம் ஆண்டில்தான் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகையால் 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன் மகளிருக்கான 33% இடஒதுக்கீடு நடப்புக்கு வர வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்