கோழிக்கோடு: கேரள மாநிலத்தில் பரவி வரும் நிபா கிருமி காரணமாக அங்கு பழங்களை வாங்க மக்கள் அஞ்சுவது தெரியவந்துள்ளது.
வழக்கமாக வியாபாரமாகும் பழங்களில் 50 விழுக்காடு அளவுக்கு விற்பனை சரிந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
வௌவால்கள் கடித்த பழங்களை மக்கள் சாப்பிட வேண்டாம் என்று நிபா கிருமிப் பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளில் கேரள அரசு அறிவுறுத்தியிருந்தது.
இதனால், மக்கள் ஒட்டுமொத்தமாக பழங்கள் வாங்குவதையே தவிர்த்துவருகின்றனர்.
கேரள மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் பழங்கள் எல்லாமே பெரும்பாலும் வெளிமாநிலங்களில் இருந்து தருவிக்கப்படுபவை.
கடந்த சில நாள்களாக 70 விழுக்காடு அளவுக்கு மொத்த வியாபாரம் பாதிக்கப்பட்டிருப்பதாக பழ வியாபாரிகள் கூறுகிறார்கள். ஒரு லாரி பழங்கள் ஒரு நாளில் விற்றுத் தீரும். ஆனால், மூன்று நாள்களுக்கு முன்பு வந்த லாரி பழத்தில் பாதிகூட இன்னமும் விற்பனையாகவில்லை என்றும் இவ்வாறு தேங்கும் பழங்கள் அழுகிவிடும் என்றும் கவலை தெரிவித்துள்ளனர்.

