தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாணவிகளின் முடி போனது; ஆசிரியைக்கு வேலை போனது

2 mins read
566550c5-77bb-46af-ad5b-a3f92a5ef2ef
தலைவிரி கோலத்துடன் வந்த எட்டு மாணவிகளை வரிசையாக நிற்க வைத்து அவர்களது முடியை ஒட்ட வெட்டிய ஆசிரியை. - படம்: இந்திய ஊடகம்

திருப்பதி: ஆந்திர மாநிலம், காக்கிநாடா, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் நகரில் செயல்படும் அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் அழகாக தலை சீவி சடை பின்னல் போட்டு வர வேண்டும் என விதிமுறை உள்ளது.

ஆனால் அந்தப் பள்ளியில் படிக்கும் 9ஆம் வகுப்பு மாணவிகள் எட்டுப் பேர் தலைமுடியை சீவி சடை பின்னல் போடாமல் தலைவிரி கோலமாக வகுப்புக்கு வந்தனர்.

ஆசிரியை மாணவிகளின் தலைவிரி கோலத்தைக் கண்டு ஆத்திரம் அடைந்தார். தலைமை ஆசிரியர் அறைக்கு சென்ற ஆசிரியை அங்கிருந்த கத்திரிக்கோலை எடுத்துவந்து தலைவிரி கோலத்துடன் வந்த எட்டு மாணவிகளையும் வரிசையாக நிற்க வைத்து அவர்களது முடியை ஒட்ட வெட்டினார்.

இதனை கண்ட சக மாணவிகள் அவர்களை கிண்டல், கேலி செய்தனர்.

இதனால் அவமானம் அடைந்த மாணவிகள் வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்தனர்.

தங்களது மகள்களின் கோலத்தைக் கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பள்ளிக்கு வந்த அவர்கள் மாணவிகளின் முடியை வெட்டிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மாணவிகளின் முடியை வெட்டிய ஆசிரியை உடனடியாக தற்காலிகமாக வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.

அவருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பெற்றோரிடம் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டு பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் வீடு சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்