புதுடெல்லி: இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, மகளிருக்கு மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் இடஒதுக்கீடு கிடைக்க வழிவகை செய்கிறது. இந்த மசோதாவுக்கு அவையின் 454 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது. இருவர் பேர் எதிராக வாக்களித்தனர்.
இதுபற்றி அவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது, “கொள்கை முடிவை எடுக்கும்போது, அதில் பெண்களின் பங்கும் இருக்கிறது என, பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த மசோதா உறுதி செய்யும். பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆனது பல்வேறு கட்சிகளுக்கு ஓர் அரசியல் பிரச்சனையாக இருக்கலாம்.
“ஜன்தன் கணக்குகளில் 70 விழுக்காடு வரை கணக்கு வைத்திருப்பவர்கள் பெண்களாக உள்ளனர் என்பதே இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. பெண்களுக்கு அதிகாரமளித்தல் உறுதி செய்யப்படுவதற்கு நீண்ட பாதைக்கான முயற்சியில் நாடு முழுவதும் 11 கோடியே 72 லட்சம் கழிவறைகள் கட்டப்பட்டு உள்ளன,” என்று அமைச்சர் அமித் ஷா கூறினார்.
மகளிருக்கான இடஒதுக்கீடு 2029ஆம் ஆண்டுக்குப்பிறகு நடைமுறைக்கு வரும் என அவர் தெரிவித்தார்.
இந்த மசோதா நிறைவேற்றத்திற்குப் பின்னர் வரலாறு படைக்கப்பட்டு உள்ளது என மத்திய சட்ட அமைச்சர் ராம் மேக்வால் கூறியுள்ளார்.

