உச்சநீதிமன்றம்: காவிரி ஆணையத்தின்உத்தரவில் தலையிட முடியாது

உச்சநீதிமன்றம்: காவிரி ஆணையத்தின்உத்தரவில் தலையிட முடியாது

2 mins read
4519f93c-b38e-4324-b172-a3cc66d41ef3
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது என்றும் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்துவிடும்படியும் கர்நாடாக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது என்றும் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்துவிடும்படியும் கர்நாடாக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் நாட்டிற்கு 5000 கனஅடி நீர் திறந்து விடும்படி காவிரி நீர் மேலாண்மை வாரியம் உத்தரவிட்டது.

ஆனால் அதன்படி தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்தது.

இந்த நிலையில், காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்துவிடக் கோரி கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு வியாழக்கிழமை விசாரிக்கப்பட்டது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது என்று மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் 15 நாட்களுக்கு ஒரு முறை கூடி சூழலை ஆராய்ந்து வருகிறது என்று தெரிவித்த நீதிபதிகள், ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு நாள்தோறும் 5 ஆயிரம் கனஅடி நீர் கிடைக்கிறதா இல்லையா என்றும் கேள்வி எழுப்பினர்.

தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடாக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, காவிரி பிரச்சனை தொடர்பாக கர்நாடகாவின் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு வியாழக்கிழமை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்தது.

காவிரியில் தமிழ்நாட்டுக்கான உரிய நீரை திறந்துவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வர இருந்த நிலையில் அந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 5,000 கன அடி நீரை திறக்க வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்குத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா மனுத் தாக்கல் செய்திருந்தது. ஆனால் ஆணையத்தின் உத்தரவில் தலையிட இயலாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

குறிப்புச் சொற்கள்