புதுடெல்லி: நிலவின் தென் துருவத்தில் இறங்கி ஆய்வு செய்த சந்திரயான்-3 விண்கலத்தின் ஆய்வு வண்டி கடந்த 15 நாட்களாக உறக்க நிலையில் இருந்து வருகிறது.
அந்த வண்டி தரையிறங்கிய இடத்திற்கு இந்தியா சிவசக்தி என்ற பெயர் சூட்டி இருக்கிறது.
சிவசக்தி புள்ளியில் சூரிய ஒளி படும்போது ஆய்வு வண்டி விழித்துக்கொள்ளும். கடந்த 15 நாட்களாக சந்திரனில் இரவு நேரம் நீடித்தது. இதனால் சந்திரனின் பருவநிலை கிட்டத்தட்ட 200 டிகிரி உறைபனி நிலையை எட்டியது.
இத்தகைய ஓர் உறைபனி சூழலில் ஆய்வு வண்டி போன்ற அதிநவீன தொழில்நுட்பச் சாதனங்கள் பொதுவாக வேலை செய்யாது.
ஆகவேதான் அதை ஓய்வு நிலைக்கு இஸ்ரோ கொண்டு சென்றது.
நிலவில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 22) அடுத்த சூரிய உதயம் ஏற்படுகிறது. இதையொட்டி ஆய்வு வண்டியை இஸ்ரோ உசுப்பிவிட்டு, எழுப்பிவிட்டு பணிகளில் ஈடுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூரிய ஒளியில் இருந்து ஒளியைப் பெற்றதும் அந்த ஆய்வு வண்டியின் மின்கலன் சக்தி பெறும். வண்டி செயல்படத் தொடங்கும்.
நிலவின் தென்துருவம் தொடர்பான பல தகவல்களை ஆய்வு வண்டி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.