சென்னை: சென்னையில் வாடகை கார் ஓட்டுநராக வேலை பார்க்கும் ராஜ்குமார் என்பவர் பழநியைச் சேர்ந்தவர். அவருக்கு திடீரென ஒரு குறுஞ்செய்தி வந்தது.
உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.9,000 கோடி வரவு வைக்கப்பட்டுவிட்டது என்று வந்த தகவலைப் பார்த்ததும் ராஜ்குமாருக்கு அது ஏதோ மோசடி வேலை என்ற சந்தேகம் எழுந்தது.
ராஜ்குமாரின் வங்கிக் கணக்கில் வெறும் ரூ.105 மட்டும்தான் இருந்தது. குறுஞ்செய்தியைக் கண்ட ஆவலால் தன்னுடைய வங்கிக் கணக்கைப் பரிசோதித்தபோது அதில் ரூ.9,000 கோடி வரவு வைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு ராஜ்குமார் அதிர்ச்சியடைந்துவிட்டார்.
உடனடியாக அவர் ரூ.21,000 பணத்தைத் தன்னுடைய நண்பருக்கு மாற்றிவிட்டுவிட்டார்.
மேலும் பணத்தை மாற்ற முயன்றபோது திடீரென 30 நிமிடங்களில் எல்லா பணமும் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டுவிட்டது.
சில நிமிடங்களில் அவருக்கு தூத்துக்குடியில் செயல்படும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
அதிகாரிகள் பேசினார்கள். தவறுதலாக பணம் வரவு வைக்கப்பட்டுவிட்டதாகவும் இனிமேல் பணத்தை கணக்கில் இருந்து எடுக்க வேண்டாம் என்றும் அதிகாரிகள் அவரைக் கேட்டுக்கொண்டார்கள்.
பிறகு ராஜ்குமார் ஏற்கெனவே அனுப்பிவிட்ட ரூ.21,000 தொடர்பில் வங்கி அதிகாரிகளுக்கும் ராஜ்குமாருக்கும் சமரசம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மேல் விவரங்கள் தெரியவில்லை என்று இந்தியா டுடே தெரிவித்து உள்ளது.

