புதுடெல்லி: புதுடெல்லியில் உள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடம் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தப் புதிய கட்டடத்தில் அலுவல்கள் தொடங்கிய முதல் நாளில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசியல் சாசனத்தின் நகல்கள் வழங்கப்பட்டன. அதன் முன்னுரையில், ‘மதசார்பற்ற’, ‘சமத்துவம்’ போன்ற வார்த்தைகள் இல்லை எனவும் மத்திய அரசு அவற்றை நீக்கி இருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாடாளுமன்றப் புதிய கட்டடத்தில் நாங்கள் கொண்டு சென்ற அரசியல் சாசன நகல்களின் முன்னுரையில் ‘மதசார்பற்ற’, ‘சமத்துவம்’ போன்ற வார்த்தைகள் இல்லை. மத்திய அரசு அவற்றை நீக்கி உள்ளது. இது மிகவும் தீவிர விவகாரம். இதுகுறித்து நாங்கள் குரல் எழுப்புவோம்,” எனத் தெரிவித்தார்.
ஆனால் இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் கூறுகையில், “நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நகல்கள் அசல் அரசியல் சாசனத்தின் நகல்கள். இந்த வார்த்தைகள் பிறகு சேர்க்கப்பட்டவைதான்,” எனக் கூறினார்.
இதற்குப் பதிலளித்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “அரசியல் சாசனத்தில் மேற்படி வார்த்தைகள் 1976ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டன என்பது எனக்கும் தெரியும். ஆனால் இன்று ஒருவருக்கு அரசியல் சாசன நகல் வழங்கப்பட்டால், அது இன்றைய பதிப்பாகவே இருக்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.
“என்னை பொறுத்தவரை இது ஒரு மிகவும் தீவிர பிரச்சினை. இந்த விவகாரத்தில் அவர்களது நோக்கம் தெளிவாக இல்லை என்பதால், இது குறித்து சந்தேகப்படுகிறேன்,” என்றும் கூறினார்.
மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பினோய் விஸ்வமும் இந்த விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாகச் சாடினார். இந்த வார்த்தைகள் நீக்கிப்பட்டது ஒரு குற்றம் எனவும் அவர் தெரிவித்தார். இதைப்போல பல்வேறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த விவகாரத்தைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு மத்திய அரசைக் குறைகூறி வருகின்றனர்.

