5 மாதங்களில் ரூ.11,000 கோடி; உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பட தமிழ்நாடு செலவிட்டது

5 மாதங்களில் ரூ.11,000 கோடி; உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பட தமிழ்நாடு செலவிட்டது

2 mins read
efe44232-f747-474d-9444-b2a1a2234dd5
சென்னையில் இந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு க ஸ்டாலின், தமிழக ஆளுநர் ரவி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். தமிழகத்தின் மேம்பாடு இந்தியாவின் மாபெரும் முன்னுரிமை என்று பிரதமர் அந்த நிகழ்ச்சியில் தெரிவித்தார். - படம்: இந்திய ஊடகம்

சென்னை: தமிழ்நாட்டு அரசாங்கம் மாநிலத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அதிக தொகையைச் செலவிட்டு வருகிறது.

இந்த ஆண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரைப்பட்ட ஐந்து மாத காலத்தில் தமிழக அரசாங்கம் ரூ.11,000 கோடி தொகையைச் செலவிட்டு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி இருப்பதாக ஓர் ஊடகம் தெரிவித்துள்ளது.

பொருள்களுக்கும் சேவைகளுக்கும் தேவையை உருவாக்கி, தனியார் துறை முதலீட்டை ஊக்குவித்து, வேலை வாய்ப்புகளை அதிகமாக்கி, அவற்றின் வழி பொருளியல் வளர்ச்சியை ஊக்குவிக்க உள்கட்டமைப்பு வசதிகளில் மூலதனச் செலவினம் இடம்பெற வேண்டும்.

கடந்த 2021 ஏப்ரல் மாதம் முதற்கொண்டே தமிழக அரசாங்கம் பல்வேறு உள்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி அவற்றை அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது.

ரூ.100 கோடிக்கும் அதிக மதிப்புள்ள திட்டங்களைக் கண்காணிப்பதற்காகவே ‘இ-முன்னேற்றம்’ என்ற இணையக் களஞ்சியம் உருவாக்கப்பட்டு உள்ளது. அது முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில் செயல்படுகிறது.

உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டில் முன்பைவிட கூடுதலாக ஒன்பது துறைகள் உள்ளடக்கப்பட்டு உள்ளன.

நிதி அமைச்சரான தங்கம் தென்னரசு, ஆகஸ்டில் 347 திட்டங்களை மறுபரிசீலனை செய்தார். அந்தத் திட்டங்களின் மதிப்பு ரூ1.55 லட்சம் கோடி. அவற்றை 15 நிர்வாகத் துறைகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன.

தமிழ்நாட்டில் 2022 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரைப்பட்ட காலத்தில் ரூ7,800 கோடி ரூபாய் உள்கட்டமைப்புக்குச் செலவிடப்பட்டது. இந்த ஆண்டில் அதிக தொகை செலவாகி உள்ளது.

கணக்கிட்டுப் பார்க்கையில் மாநில அரசு, மாதம் ரூ 1,300 கோடி செலவிட்டு உள்ளது.

அமைச்சர் மறுபரிசீலனை செய்த 347 திட்டங்களில் 75 திட்டங்கள் நிறைவடைந்து உள்ளன. ரூ.12,264 கோடி மதிப்பிலான ராமநாதபுரம் மின்சக்தித்திட்டம், ரூ,5,000 கோடி மதிப்பிலான எண்ணூர் அனல் மின்சக்தித் திட்டம் தொடர்பில் அரசாங்கம் விரைவில் முடிவு எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்